மாருதி ஸ்விஃப்ட் காருக்கு குவியும் முன்பதிவு: வெயிட்டிங் பீரியட் அதிகரிப்பு!
புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிந்து வருகிறது. இது மாருதி நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
எதிர்பார்த்தது போலவே, புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. இது மாருதி நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்ததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. வந்தவுடனே போட்டியாளர்களின் வயிற்றிலும் புளியை கரைத்தது.

இந்த நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. விலை அறிவிப்புக்கு முன்னரே முன்பதிவு துவங்கிய நிலையில், இரண்டு மாதங்களில் மட்டும் 75,000 புக்கிங்குளை புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றிருப்பதாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு அதிகரித்து வருவதையடுத்து, இந்த காருக்கான வெயிட்டிங் பீரியட் என்று சொல்லக்கூடிய முன்பதிவு செய்தது முதல் டெலிவிரி பெறுவதற்கான கால இடைவெளி வெகுவாக அதிகரித்து வருகிறது.

தற்போது தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொறுத்து, சில வாரங்களில் துவங்கி அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை நீள்கிறது. அதேநேரத்தில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைந்து டெலிவிரி கொடுக்கும் பணிகளிலும் மாருதி தீவிரம் காட்டி வருகிறது.

மூன்றாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பழைய மாடலிலிருந்து வடிவமைப்பிலும், வசதிகளிலும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், புதிய மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய கருப்பு வண்ண க்ரில் அமைப்பு காரின் வசீகரத்தை கூட்டுவதாக இருக்கிறது. சி பில்லர் அமைப்பில் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டாலும், இரண்டிலும் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதும் வாடிக்கையாளர்கள் தேர்வுக்கு சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4கிமீ வரை மைலேஜ் தரும் என்பதும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த காரில் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியும் அதிகரித்துள்ளது.

அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது. டாப் வேரியணட்டில் ரியர் பார்க்கிங் கேமரா வசதியும் உள்ளது. இதனால், கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த மாடலாக மாறி இருக்கிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.8.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது. ஆரம்ப நிலை வசதிகள் கொண்ட மாடல் சென்னையில் ரூ.5.66 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து ரூ.9.38 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications