ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடலை இந்தியாவில் களமிறக்க மாருதி திட்டம்!!
புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரேஸ் கார்களில் இடம்பெற்றிருக்கும் சில ஆக்சஸெரீகள் இடம்பெற்றிருக்க
புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சாதாரண கார்களில் ரேஸ் கார்களில் இருப்பது போன்ற ஆக்சஸெரீகள் மற்றும் கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சினுடன் ஆர்எஸ் மாடல்களை கார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. Racing Sport என்பதன் சுருக்கமாக RS என்று குறிப்பிடப்படும் இந்த கார்களின் விலை சற்றே கூடுதலாகவும், தனித்துவமாகவும் இருப்பதால் அதீத கார் பிரியர்களை கவர்ந்து வருகின்றன.

இந்த வகையில், ரேஸ் கார்களில் இடம்பெற்றிருக்கும் சில ஆக்சஸெரீகள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் கொண்டமாருதி ஸ்விஃப்ட் காரின் சக்திவாய்ந்த ஆர்எஸ் மாடல் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. ஆனால், விலை அதிகம் நிர்ணயிக்கப்பட வேண்டி இருக்கும் என்ற காரணத்தை வைத்து இந்த மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் மாருதி தயக்கம் காட்டி வந்தது.

இந்த சூழலில், ஸ்விஃப்ட் மார்க்கெட்டை வலுப்படுத்துவதற்காக ஆர்எஸ் மாடலை அறிமுகம் செய்துவிடலாம் என்று மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பெலினோ ஆர்எஸ் மாடலைப் போன்றே இந்த காரும் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷனுடன் வரும் என்று தெரிகிறது. ஸ்விஃப்ட் ஆர்எஸ் காரில் மிரட்டலான பம்பர் அமைப்பு, சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர், கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மாருதி பெலினோ ஆர்எஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பொருத்தப்பட்டிருக்கும். டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த 998சிசி எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக முன்சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி கடத்தும் அமைப்பை பெற்றிருக்கும். தற்போதைய மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால், ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடலின் பூஸ்டர்ஜெட் எஞ்சின் அதிசக்திவாய்ந்ததாக இருக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடலில் 16 அங்குல அலாய் வீல்கள், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், கடினமான சஸ்பென்ஷன் அமைப்புடன் சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும். உட்புறத்திலும் இருக்கைகளில் ஆர்எஸ் பிராண்டு வேலைப்பாடுகளுடன் தனித்துவமாக இருக்கும்.

மாருதி பெலினோ ஆர்எஸ் காரைவிட புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் ஆர்எஸ் மாடல் விலை குறைவாக நிர்ணயிக்கப்படும். தற்போது மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட் ரூ.7.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் ரூ.7.80 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த செய்தி ஸ்விஃப்ட் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
Source:GaadiWaadi


Click it and Unblock the Notifications