புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!
புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியைவிட சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வ
புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் அறிமுக விழாவிலிருந்து எமது நிருபர் புரோமித் கோஷ் தரும் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

சில வாரங்களுக்கு முன் இந்த புதிய எஸ்யூவியின் வரைபடங்களை வெளியிட்டு கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது நிஸான் கார் நிறுவனம். இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியை முறைப்படி இன்று அறிமுகம் செய்துள்ளது. எனினும், விலை விபரங்கள் பின்னர் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட இருக்கிறது.

நிஸான் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான ரெனோ கார் நிறுவனத்தின் கேப்ச்சர் க்ராஸ்ஓவர் மாடல் வடிவமைக்கப்பட்ட அதே M0 பிளாட்ஃபார்மின் அடிப்படையில்தான் இந்த புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நிஸான் எஸ்யூவி டிசைனில் கவர்ச்சிகரமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவிக்கும், இந்திய மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. எனினும், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பில் புதிய பம்பர் அமைப்பு, பனி விளக்குகள் மேலாக ஏர் வென்ட்டுகள், அலுமினியம் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டுள்ளன.

எல்இடி ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குககள், புதிய ஹனிகோம்ப் பிளாஸ்டிக் வலை அமைப்புடன் கூடிய க்ரில் அமைப்பு, க்ரில் அமைப்பை தாங்கி நிற்கும் வி வடிவிலான க்ரோம் பட்டை அமைப்பு ஆகியவை முகப்பில் வசீகரமான அம்சங்களாக கூறலாம்.

பக்கவாட்டில் பிரம்மாண்டமான தோற்றத்தை தரும் பெரிய வீல் ஆர்ச்சுகள், கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பில்லர்கள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், கூரையையும், பாடியையும் தனியாக பிரித்துக் காட்டும் டி பில்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கினறன. ரூஃப் ரெயில்கள் மற்றும் ஆரஞ்ச் வண்ணம் தீட்டப்பட்ட கூரை அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பின்புறத்தில் பம்பர் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்திய மாடலில் எரிபொருள் டேங்க் மூடியானது வலது பக்கத்திற்கு மாறி இருக்கிறது. அழகான டெயில் லைட் க்ளஸ்ட்டர், புடைப்பான பின்புறம், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவையும் பின்புறத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் டிசைனில் இந்தியர்களை வசீகரிக்கும்.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியைவிட இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் வடிவம் சற்று பெரியது. இந்த எஸ்யூவி 4,384 மிமீ நீளம் கொண்டது. அதாவது, வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட 89 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்த எஸ்யூவி 1,813 மிமீ அகலமும், 1,656 மிமீ உயரத்தையும் பெற்றிருக்கிறது.

இந்த எஸ்யூவியின் ஆக்சில்களுக்கு இடையிலான வீல் பேஸ் 2,673 மிமீ என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 432 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. இது நிச்சயம் நீண்ட தூர பயணங்களின்போது மிகுந்த சவுகரியத்தை அளிக்கும்.

இந்த எஸ்யூவியானது 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை அளிக்கும். உட்புறத்தில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும்.

இந்த புதிய எஸ்யூவியில் 106 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்படும். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள நிஸான் டெரானோ எஸ்யூவியைவிட விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும். ரூ.9.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








