புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!!
வரும் ஜூன் மாதம் புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதலில் டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.
வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியின் இந்திய வருகை குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக வரும் இந்த புதிய சொகுசு எஸ்யூவி குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ 40 சீரிஸ் கான்செப்ட்டின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வால்வோ 40 சீரிஸ் கான்செப்ட் அடிப்படையில் மின்சார கார்களை வால்வோ உருவாக்க உள்ளது. இது 5 சீட்டர் மாடலாக விற்பனைக்கு வருகிறது.

வால்வோ எக்ஸ்சி60 காரின் முகப்பு க்ரில் அமைப்பு அப்படியே இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சுத்தியல் வடிவிலான எல்இடி ஹெட்லைட் முத்தாய்ப்பான விஷயம்.

இந்த கார் மிக அடக்கமான சொகுசு எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பின்புறத்தில் சரிவான பின்புற விண்ட்ஷீல்டு அமைப்பு, இரட்டை க்ரோம் புகைப்போக்கி குழல்கள், L- வடிவிலான ஸ்டைலான எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் என அசத்துகிறது.

வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியில் 9.0 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். தரமான இன்டீரியர் பாகங்கள் கொாடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியானது இரண்டுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 245 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற இருக்கிறது. அதேநேரத்தில், முன்புற வீல்கள் சறுக்கும் பட்சத்தில் மட்டுமே பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் ஆற்றல் செலுத்தப்படும். முதலில் டீசல் எஞ்சின் ஆப்ஷனில்தான் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வரவேற்பை பொறுத்து பெட்ரோல் மாடலும் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முதல்கட்டமாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பின்னர், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான திட்டமும் உள்ளது. இதன்மூலமாக, விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது.

ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1, ஆடி க்யூ3 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








