நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார் இந்திய வருகை உறுதியானது!!
நிஸான் லீஃப் மின்சார கார் இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஸான் லீஃப் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடல்களில் ஒன்றாக நிஸான் லீஃப் விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த மின்சார கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த ஆண்டுக்குள் நிஸான் லீஃப் மின்சார கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் தலைமுறை மாடலாக வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் லீஃப் கார்தான் இந்தியாவிலும் வர இருக்கிறது.

இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு இந்திய விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. மேலும், சென்னையில் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிஸான்- ரெனோ கூட்டணியின் கார் தொழிற்சாலையில் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பும் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் இந்த காரை அறிமுகம் செய்யும் திட்டத்தை இறுதி செய்ய இருக்கிறது. இது பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார் மாடலாக வர இருக்கிரது.

எனவே, ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதே விலை மிக அதிகமாக நிர்ணயிப்பதற்கான காரணியாக இருக்கும்.

நிஸான் லீஃப் கார் தவிர்த்து புதிய எஸ்யூவி ரக கார் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிஸான் கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு புதிய கார் என்ற ரீதியில் தனது வர்த்தகத்தை வலுவாக்கிக் கொள்வதற்கு நிஸான் கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








