பிஎம்டபிள்யூ அலுவலகத்தில் போலீஸ் திடீர் ரெய்டு.. முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதால் சிக்கல்..
பிஎம்டபிள்யூ அலுவலகத்தில், போலீசாரும், அதிகாரிகளும் திடீரென நுழைந்து, அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது சில முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ அலுவலகத்தில், போலீசாரும், அதிகாரிகளும் திடீரென நுழைந்து, அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது சில முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் பிஎம்டபிள்யூ. தென் கொரிய நாட்டிற்கான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தலைமை அலுவலகம், தென் கொரிய தலைநகர் சியோலில் செயல்பட்டு வருகிறது. அங்கு போலீசாரும், அதிகாரிகளும் நேற்று (ஆகஸ்ட் 30), அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

தென் கொரிய நாட்டில், பிஎம்டபிள்யூ கார்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் சுமார் 40 பிஎம்டபிள்யூ கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. எனவே பிஎம்டபிள்யூ நிறுவனம் மீது விசாரணை நடத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாகதான், தென் கொரிய நாட்டிற்கான பிஎம்டபிள்யூ தலைமை அலுவலகத்தில், ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 30 போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பிஎம்டபிள்யூ அலுவலகத்திற்குள் நுழைந்து, அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

தீப்பற்றி எரிந்த அனைத்து பிஎம்டபிள்யூ கார்களும், டீசல் இன்ஜினை கொண்டவையாகும். அவை அனைத்தும் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உருவாக்கப்பட்டவை. தீப்பற்றி எரிந்த கார்களில், மிகவும் புகழ்பெற்ற 520டி மற்றும் 320டி ஆகிய மாடல்களும் அடக்கம்.

Exhaust Gas Recirculation (EGR) சிஸ்டமில் ஏற்பட்ட பிரச்னையால்தான் கார்கள் தீப்பற்றி எரிந்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கொரியாவிற்கான தலைவர் கிம் ஹியோ ஜூன் மன்னிப்பும் கேட்டு கொண்டார்.

எனினும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி, தென் கொரிய போக்குவரத்து துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டது. அத்துடன் 1,06,000 கார்களை ரீகால் செய்து, கட்டாய பாதுகாப்பு ஆய்வை நடத்தும்படியும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தை கேட்டு கொண்டது.

அதன்பேரில் கார்களை ரீகால் செய்து, குறைபாடுள்ள பகுதிகளை மாற்றி தரும் பணியில், பிஎம்டபிள்யூ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில்தான், தென் கொரியாவிற்கான பிஎம்டபிள்யூ தலைமை அலுவலகத்தில் போலீசாரும், அதிகாரிகளும் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

ரெய்டு நடத்தியது குறித்து போலீசார் கூறுகையில், ''உண்மையை வெளிக்கொணர முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம். கார்கள் ஏன் தீப்பற்றி எரிந்தது? என்பது தொடர்பாக ஏதாவது துப்பு கிடைக்கும் என்பதற்காகதான் ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு நடைபெற்ற, தென் கொரிய நாட்டிற்கான பிஎம்டபிள்யூ தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான சில ஆவணங்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அத்துடன் சில மெட்டீரியல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன'' என்றனர்.

தென் கொரிய நாட்டிற்கு இறக்குமதியமாகும் 10ல் 6 கார்கள், ஜெர்மனியில் இருந்துதான் வருகின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனமானது, நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும், தென் கொரியாவில் சுமார் 39,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image for representative purpose only.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








