பரிசாக கிடைத்த லம்போர்கினி சூப்பர் காரை ஏலம் விட்ட போப் ஆண்டவர்...! நெகிழ்ச்சியான செய்தி...!
தனக்கு பரிசாக கிடைத்த லம்போர்கினி சூப்பர் காரை போப் ஆண்டவர் ஏலம் விட்டார். அதன் மூலம் கிடைத்த 5.80 கோடி ரூபாயை, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் வழங்குகிறார்.
தனக்கு பரிசாக கிடைத்த லம்போர்கினி சூப்பர் காரை போப் ஆண்டவர் ஏலம் விட்டார். அதன் மூலம் கிடைத்த 5.80 கோடி ரூபாயை, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் வழங்குகிறார். இதுகுறித்த நெகிழ்ச்சியான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

லம்போர்கினி கார் பரிசு
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குரு போப் ஆண்டவர். இவரது புனித தன்மைக்கு பரிசாக, லம்போர்கினி ஹுராகேன் ஆர்எம்டி கூப் சூப்பர் கார், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. ஆட்டோமொபைலி லம்போர்கினி நிறுவனம் இந்த காரை அவருக்கு வழங்கியது.

தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு
ஆனால் எளிய வாழ்க்கை நடத்தி வரும் போப் ஆண்டவரோ, அந்த காரை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்தார்.

மதிப்புமிக்க கையெழுத்து
இதனுடன் நின்று விடாமல், அந்த காரின் பேனட்டில் தனது கையெழுத்தையும் போப் ஆண்டவர் இட்டார். ஏற்கனவே விலை உயர்ந்த காராகதான் அது விளங்கியது. அத்துடன் போப் பிரான்சிஸின் கையெழுத்தும் கிடைத்ததால், கார் விலை மதிப்புமிக்கதாக மாறிவிட்டது.

வெள்ளை, தங்க மஞ்சள் நிறம்
இந்த லம்போர்கினி ஹுராகேன் ஆர்எம்டி கூப் சூப்பர் கார் வெள்ளை நிறத்தால் ஆனது. அத்துடன் காரின் மத்திய பகுதி மற்றும் ஜன்னலை சுற்றிலும் தங்க மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டுள்ளன.

ஏலம்
இதனிடையே முன்கூட்டியே திட்டமிட்டபடி போப் ஆண்டவரின் லம்போர்கினி ஹுராகேன் ஆர்எம்டி கூப் சூப்பர் கார் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொனாக்கோ நாட்டில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

ஏலம் விட்ட ஆர்.எம்.சோத்பைஸ்
கார்களை ஏலம் விடுவதில் உலகப்புகழ் பெற்ற ஆர்.எம்.சோத்பைஸ் என்ற நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அரிதிலும் அரிதான கார்கள் மற்றும் பல சூப்பர் கார்களை அந்நிறுவனம் ஏலம் விட்டுள்ளது. ஆனால் இம்முறை போப் ஆண்டவரின் கார் ஏலத்திற்கு வந்திருந்தது.

5.80 கோடி ரூபாய்
போப் ஆண்டவரின் சூப்பர் கார் இந்திய மதிப்பில் தோராயமாக 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் மாறாக, போப் ஆண்டவரின் சூப்பர் கார் 5.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த பணம் முழுவதும் போப் ஆண்டவருக்கு நேரடியாக சென்று விடும்.

ஈராக்கிற்கு உதவி
ஏலம் மூலம் கிடைத்த பணத்தில் 70 சதவீதம், ஈராக்கில் உள்ள நினிவே பகுதிக்கு வழங்கப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் ஒன்றுதான் நினிவே. அங்குள்ள மக்களின் வளர்ச்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். எஞ்சிய 30 சதவீத தொகை 3 தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அட்டகாசமான கார்
சரி, ஏலம் விடப்பட்ட லம்போர்கினி ஹுராகேன் ஆர்எம்டி கூப் சூப்பர் கார் குறித்த விபரங்களை இனி காணலாம். இதன் எக்ஸ்டீரியரை போலவே இன்டீரியரும் அட்டகாசப்படுத்துகிறது. ரியர் வீல் டிரைவ் கொண்ட இந்த காரில் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 573 ஹார்ஸ் பவரையும், 398 பவுண்டு-பீட் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது.

மணிக்கு 320 கிலோ மீட்டர்
லம்போர்கினி ஹுராகேன் ஆர்எம்டி கூப் சூப்பர் காரின் டாப் ஸ்பீடு 198 மைல்ஸ்/ஹவர். அதாவது கிலோ மீட்டரில் கணக்கிட்டால், மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயக்கூடிய திறன் வாய்ந்தது.

சிறந்த கார்
2014ம் ஆண்டு ஜெனீவா ஆட்டோ ஷோவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின் லம்போர்கினி நிறுவனத்தின் சிறந்த மற்றும் அதிகம் விற்பனையாகும் கார் என்ற அந்தஸ்தை விரைவில் பிடித்தது.

ஸ்பெஷல் எடிசன்
மார்க்கெட்டில் 6 வித்தியாசமான மாடல்களில் ஹுராகேன் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் இது போப் ஆண்டவருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 7வது ஸ்பெஷல் எடிசன் கார் ஆகும்.

முதல் முறை அல்ல...
தனக்கு பரிசாக கிடைத்த ஒரு பொருளை போப் ஆண்டவர் ஏலம் விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய காலங்களிலும் போப் ஆண்டவர் இதுபோன்று செய்துள்ளார். அப்போது ஏலம் விடப்பட்ட பொருட்கள் எல்லாம், அதன் மார்க்கெட் விலையை தாண்டி, நல்ல விலைக்கு வாங்கப்பட்டன. கடந்த 2013ம் ஆண்டு போப் ஆண்டவருக்கு ஹார்லி டேவிட்சன் டைனா சூப்பர் கிளைட் பைக் பரிசாக அளிக்கப்பட்டது. அதனையும் போப் ஆண்டவர் ஏலம் விட்டார். இந்திய மதிப்பில் 1.50 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 2.50 கோடி ரூபாய் கிடைத்தது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








