ரெனோ க்விட் காரின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்!!
ரெனோ க்விட் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ரெனோ க்விட் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட் காரின் அடிப்படையிலான இந்த எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல் ரெனோ K-ZE என்ற பெயரில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ரெனோ க்விட் காரை ஒத்திருக்கிறது. அதேநேரத்தில், டிசைனில் சிறிய மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

மெல்லிய ஹெட்லைட் வடிவம், புதிய க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்புடன் ரெனோ க்விட் காரிலிருந்து வேறுபடுகிறது. இந்த காரில் அளவில் பெரிய சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், முழுமையான எஸ்யூவி போல தோற்றமளிக்கிறது. கான்செப்ட் மாடலில் ஆகாய நீல வண்ண ஸ்டிக்கர் அலங்காரமும் அசத்துகிறது.

ரெனோ K-ZE கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார் 250 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும். வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள எளிதாக சார்ஜ் செய்யும் விதத்தில், டூயல் போர்ட் சார்ஜருடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தோற்றத்தில் எஸ்யூவி போல இருந்தாலும் ஹேட்ச்பேக் ரகத்தில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக இதனை நிலைநிறுத்த ரெனோ திட்டுமிட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு சீனாவில் இந்த காரை முதலில் களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த டாங்ஃபெங் மோட்டார் குழுமம் மற்றும் தனது கூட்டாளி நிஸான் கார் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமான e- GT நியூ எனர்ஜி ஆட்டோமோட்டிவ் கம்பெனியின் சார்பில், சீன ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு, பெரும்படியான வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு தக்கவாறு இந்த காரின் விலையை நிர்ணயிக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனா மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் இந்த மின்சார கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் உள்பட மின்சார கார்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டவுடன் இந்தியாவில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், அடுத்த சில ஆண்டுகளில், ஓரளவு மின்சார கார்களுக்கு கட்டமைப்பு வசதிகள் வந்தவுடன், இந்த மின்சார கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications