ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி அறிமுகம்: முக்கிய விபரங்கள்!
ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பெரும் பணக்காரர்களின் அந்தஸ்தின் அடையாளமாக விளங்குகிறது. இதுவரை உயர்வகை ஆடம்பர செடான் ரக கார்களை தயாரித்து வந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறது.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின், சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பெரும் பணக்காரர்களின் அந்தஸ்தின் அடையாளமாக விளங்குகிறது. இதுவரை உயர்வகை ஆடம்பர செடான் ரக கார்களை தயாரித்து வந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறது.

தனது முதல் மாடலை கலினன் என்று பெயர் சூட்டி பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. 1905 ஆண்டு தென் ஆப்ரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்ட கலினன் என்ற 3,106 கேரட் மிகப்பெரிய வைரக் கல்லின் நினைவாக இந்த பெயரை சூட்டி இருக்கிறது. இந்த வைரம் தற்போது இங்கிலாந்து ராணியின் க்ரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபேன்டம் காரின் அடிப்படையில் கலினன் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. "எங்கெங்கும், எப்போதும், ஈடு இணையில்லா சொகுசு எஸ்யூவி" என்ற தாரக மந்திரத்துடன் இந்த புதிய எஸ்யூவி மாடலை தயாரித்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ்.

ஃபேன்டம் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் என்பதால் என்னவோ, முகப்பு டிசைன் அப்பட்டமாக ஃபேன்டம் காரின் சாயலை பெற்றிருக்கிறது. ஹெட்லைட் டிசைன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் க்ரில் அமைப்பு ஆகியவை ரோல்ஸ்ராய்ஸ் வாரிசாக பட்டென தெரிகிறது.

இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 22 அங்குல அலாய் சக்கரங்கள் பிரம்மாண்டத்தை கூட்டுகிறது. எஸ்யூவி என்பதற்காக பேன்டம் காரின் பூட்ரூம் நறுக்கப்பட்டு கதவு பொருத்தப்பட்டுள்ளது. 1930களில் ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் பயன்படுத்தப்பட்ட D-Back என்ற டிசைன் தாத்பரியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபேன்டம் காரின் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடலைப் போல சில கோணங்களில் காட்சியளிக்கிறது. 600 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் உள்ளது.

பிற ரோல்ஸ்ராய்ஸ் கார்களை போலவே மிக உயரிய டிசைன் அம்சங்களையும், சொகுசு வசதிகளையும் ரோல்ஸ்ராய்ஸ் கலினன் எஸ்யூவி பெற்றிருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பம்போல ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் ரோல்ஸ்ராய்ஸ் வழங்க இருக்கிறது.

ஓட்டுனர் உள்பட 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கும் கல்லினன் எஸ்யூவியின் பின் இருக்கையில் இருவர் சவுகரியமாக அமர்ந்து பயணிப்பதற்கான விசேஷ இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது.

பூட் ரூமின் பின்புறத்தில் இரண்டு பேர் அமர்ந்து கொள்வதற்கான சிறிய இருக்கைகள் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகின்றன. இதன் நடுவில் மதுகோப்பைகளை வைத்துக் கொள்வதற்கான சிறிய டேபிள் ஒன்றும் உள்ளது. பிக்னிக் செல்லும்போது சாவகாசமாக அமர்ந்து மது அருந்துவதற்கான வசதியை அளிக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் இந்த இருக்கை அமைப்பு வெளியே வந்துவிடும்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபேன்டம் காரில் பயன்படுத்தப்படும் அதே 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின்தான் கலினன் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி எஞ்சின் அதிகபட்சமாக 571 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாகவும் கலினன் வருகிறது. அனைத்து நிலபரப்புகளையும் எளிதாக எதிர்கொள்ளும் விதத்தில், ஆஃப்ரோடு பட்டன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடினமான நிலப்பரப்பாக இருந்தாலும், பயணிப்பவர்களுக்கு அதிர்வுகள் தெரியாத அளவிற்கு மேஜிக் கார்பெட் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்ப்ட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கலினன் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








