சிக்னல் ஜம்ப் விபரீதத்தை உணர்த்தும் விபத்து... இனியாவது தவிர்ப்பீர்களா?
கொச்சி நகரின் பைப்லைன் சிக்னலில் சிவப்பு சிக்னல் விழுவதை கண்ட ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி அதிவேகத்தில் கடக்க முற்பட்டது.
சிக்னல் ஜம்ப் என்பது வாகன ஓட்டிகளின் அன்றாட விதிமீறல்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இதில் உள்ள விபரீதத்தை புரிந்துகொள்ளாமல் வாகன ஓட்டிகள் செய்யும் இந்த தவறு ஏராளமான விபத்துக்களுக்கு வழிகோலுகிறது. அந்த வகையில், கேரளாவில் நடந்த விபத்தும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

கொச்சி நகரின் பைப்லைன் சிக்னலில் சிவப்பு சிக்னல் விழுவதை கண்ட ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி அதிவேகத்தில் கடக்க முற்பட்டது. அப்போது, க்ரீன் சிக்னல் விழுந்ததை பார்த்த டாடா 709 டிரக் ஓட்டுனர் வண்டியை கிளப்பி இருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதத்தில் அந்த சாலை சந்திப்பை கடக்க முயன்ற ரேஞ்ச்ரோவர் எவோக் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டுள்ளார். அதிக பாரம் ஏற்றப்பட்ட நிலையில், அந்த டிரக் கவிழ்ந்தது. அத்துடன், அதன் பின்சக்கரங்களுக்கான அச்சும் நிலைதடுமாறியபோது தனியாக கழன்றுவிட்டது.

டிரக் குறுக்கே வருவதை பார்த்த ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியும் திடீரென பிரேக் போட்டதால், சாலைத் தடுப்பில் மோதியதாக தெரிகிறது. இதில், அந்த காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஒருவேளை, டிரக் டிரைவர் சரியான வேளையில் பிரேக் போடவில்லை என்றால், ரேஞ்ச்ரோவர் மீது பயங்கரமாக மோதி பெரிய விபத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி இருக்கும்.

மேலும், கார் மீது டிரக் கவிழ்ந்திருந்தாலும் அப்பளமாகி இருக்கும் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகளின் அலட்சியம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இன்று பெரும்பாலான சிக்னல்களில் சிவப்பு விளக்கு விழுவதை பார்த்து அதிவேகமாக கடக்க முற்படுவதும், வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் கடக்கும்போது குறுக்கே செல்வதும், பாதசாரிகளுக்கான சிக்னலின்போது சில நொடிகள் பொறுக்க முடியாமல் முண்டியடித்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு சிக்னலை மதிக்க பழகிக் கொள்ளுங்கள். ஒரு சில நிமிடங்கள் தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாழ்க்கையையே இழந்துவிட வேண்டாம்.

உங்கள் வாழ்க்கை பறிபோவதுடன், அந்த சாலையில் வரும் பிறரின் வாழ்க்கையையும் கெடுத்து நாசமாக்கிவிடாதீர். நீங்கள் எவ்வளவு திடமான கட்டமைப்பு கொண்ட காரை பயன்படுத்தினாலும், விபத்தில் சேதமும், காயம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது என்பதை மனதில் வையுங்கள்.

அவை எல்லாம் உயிர் காக்கும் கருவியாக பயன்படுமே தவிர்த்து, முற்றிலும் காயமில்லாமல் காரிலிருந்து வெளியே வருவது என்பது இயலாத காரியம். எனவே, வாகனத்தை இயக்கும்போது சாலை விதிகளை பின்பற்றுவதை வழக்கமாக்குங்கள். பிற வாகன ஓட்டிகளுடன் போட்டி போடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.

இந்த விபத்து வீடியோ குறித்து மற்றொரு தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஃபேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த பதிவுகளில் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி மோதியதில்தான், டாடா 709 டிரக் கவிழ்ந்து அச்சு கழன்றதாக செய்திகள் உலவுகின்றன. ஆனால், இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளவில்லை என்பது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவல்.
Source: 4x4 India


Click it and Unblock the Notifications








