டொயோட்டா ரஷ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!
இந்தியாவில் புதிய எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் புதிய எஸ்யூவி மாடலை டொயோட்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த புதிய டொயோட்டா எஸ்யூவி குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விளங்குகிறது. இந்த சூழலில், அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் புதிய மாடலை களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் டொயோட்டா ரஷ் மற்றும் சிஎச்-ஆர் ஆகிய மாடல்கள் இந்த ரகத்தில் விற்பனையில் இருக்கின்றன. இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களில் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அகிட்டோ தட்சிபானா ரஷ் அல்லது சிஎச்-ஆர் எஸ்யூவி மாடல்களில் ஒன்றை இந்தியாவில் களமிறக்குவதற்கு பரிசீலித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களில் ரஷ் எஸ்யூவி மாடல் இந்தியா வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video


ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடலை களமிறக்குவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

டொயோட்டா ரஷ் எஸ்யூவியில் ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக கருதும் விஷயம், 7 சீட்டர் மாடல் என்பதுதான். எஸ்யூவி மார்க்கெட் மட்டுமின்றி, மாருதி எர்டிகா கார் உள்ளடக்கிய காம்பேக்ட் எம்பிவி கார் மார்க்கெட்டின் வர்த்தக வாய்ப்பையும் இந்த எஸ்யூவி மூலமாக ஈர்த்துக் கொள்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

புதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவியின் வடிவமைப்பும் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிகச் சிறப்பாக இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டொயோட்டா இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








