சவாலான விலையில் டொயோட்டா பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள்!
மாருதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட இருக்கும் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களின் ரீபேட்ஜ் மாடல்களின் விலை மிக சவாலாக நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
மாருதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட இருக்கும் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களின் ரீபேட்ஜ் மாடல்களின் விலை மிக சவாலாக நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியும், டொயோட்டா நிறுவனமும் கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு செய்து கொண்டன. இதன்படி, மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா எஸ்யூவி கார்களை டொயோட்டா நிறுவனமும், கரொல்லா செடான் காரை மாருதி நிறுவனமும் விற்பனை செய்வதற்கான திட்டம் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரீபேட்ஜ் செய்யப்படும் கார் மாடல்கள் பொதுவாக விலை அதிகம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக ரெனோ டஸ்ட்டர் நிஸான் பிராண்டில் டெரானோவாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நிஸான் விலை அதிகம் நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம்.

மறுபுறத்தில், நிஸான் சன்னி கார் ரெனோ ஸ்காலா என்ற மாடலில் ரீபேட்ஜ் செய்தபோது விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ரெனோ ஸ்காலா உள்ளிட்ட ரீபேட்ஜ் செய்த மாடல்களுக்கு போதிய வரவேற்பில்லை. இதனால், ரெனோ ஸ்காலா, பல்ஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் விலக்கிக் கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த சூழலில்தான், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும், டொயோட்டாவும் இந்த ரீபேட்ஜ் யுக்தியை கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில், மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா ரீபேட்ஜ் செய்யும்போது அதிக விலை நிர்ணயிக்கும் வகையில்தான் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.

இதுகுறித்து டொயோட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்," பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி சிறப்பான மதிப்பை பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களுக்கு அதிக அளவில் உள்ளூர் உதிரிபாகங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலமாக, விலையை மிக சவாலாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம். இந்திய மார்க்கெட்டில் விலை நிர்ணயம் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனால், டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள் மீதான எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. அடுத்த ஓர் ஆண்டில் இந்த ரீபேட்ஜ் மாடல்கள் இந்திய மண்ணில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








