வஸிராணி ஷூல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்!!
இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் மாடலாக வர இருக்கும் வஸிராணி ஷூல் காரின் கான்செப்ட் மாடல் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் மாடலாக வர இருக்கும் வஸிராணி ஷூல் காரின் கான்செப்ட் மாடல் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் கார்பன் ஃபைபர் அடிச்சட்டம், இலகு எடை கொண்ட பேட்டரி, டர்பைன்- எலெக்ட்ரிக் ஹைப்ரிட் நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த கார் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

பிரபல கார் வடிவமைப்பு நிபுணரான சுங்கி வஸிராணி துவங்கியிருக்கும் வஸிராணி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்த ஹைப்பர் காரை உருவாக்கி இருக்கிறது. வால்வோ, ரோல்ஸ்ராய்ஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களில் சுங்கி வஸிராணி பணியாற்றி இருக்கிறார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிசைன் ஸ்டூடியோவில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடந்த குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு கார் திருவிழாவில் இந்த கார் முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் இந்த காரின் கான்செப்ட் மாடல் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியரின் முயற்சியிலும், கைவண்ணத்திலும் உருவாகி இருக்கும் இந்த ஹைப்பர் கார் உருவாக்கப் பணிகளுக்கு ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா-1 அணியும், மிச்செலின் டயர் நிறுவனமும் பின்னூட்டங்களை அளித்து முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஐ-8 ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார் போன்று, இந்த காரில் மிகவும் இலகு எடை கொண்ட வலுவான கார்பன் ஃபைபர் அடிச்சட்டம் மற்றும் முக்கிய பாகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மிகச் சிறந்த ஏரோடைனமிக்ஸ் எனப்படும் காற்றை கிழித்துச் செல்லும் வடிவமைப்பை பெற்றிருக்கிறது. காற்று காரணமாக ஏற்படும பின்னோக்கு இழுவிசை மிக மிக குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்பைன் எஞ்சின் - எலெக்ட்ரிக் மோட்டார் இணைப்பு தொழில்நுட்பத்தில் இயங்கும் என்பதுதான் இந்த ஹைப்பர் காரின் ஹைலைட். ரயில் எஞ்சின், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல்களில்தான் டர்பைன் மற்றும் எலெக்ட்ரிக் நுட்பம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்து இந்த காருக்கான டர்பைன் சிஸ்டத்தை இங்கிலாந்து நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

ஒவ்வொரு சக்கரத்திலும் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார்களுக்கான மின் ஆற்றல் டர்பைனிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரி மூலமாக பெறப்படுகிறது. திடீரென ஓட்டுனர் வேகத்தை அதிகரிக்கும்போது தேவைப்படும் டார்க் திறனை சிறப்பாக வழங்குவதற்காக மைக்ரோ- டர்பைனும் உள்ளது. இதனால், செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கோனிசெக் ரெகேரா போன்ற சிங்கிள் ரேஷியோ டிரான்ஸ்மிஷன் அமைப்பு இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காருக்கு விசேஷ பெட்ரோல் ஏதும் தேவையில்லை. சாதாரண பெட்ரோலிலேயே இயங்கும் என்பது மற்றொரு ஆகச் சிறந்த விஷயம். மேலும், சிறப்பான ரேஞ்சை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள கட்டமைப்பு ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படும்.

இதுபோன்ற ஹைப்பர் கார்களை தயாரிக்க பெரும் முதலீடும், அதிகபட்ச தொழில்நுட்ப ஒத்துழைப்பும் தேவைப்படும். உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஹைப்பர் கார் மாடல்களை உருவாக்க பெரும் முதலீட்டை செய்து களத்தில் இறங்கி இருக்கின்றன. அதனை ஒரு இந்திய வடிவமைப்பு வல்லுனர் துணிச்சலுடன் செய்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம்.


Click it and Unblock the Notifications