ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களில் புதிய பெட்ரோல் எஞ்சின்!
ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்கள் புதிய பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களில் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து மோட்டார்ஆக்டேன் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ செடான் கார்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக, மூன்று சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும்,, 110 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. ஆனால், புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

போலோ காரில் இடம்பிடிக்க இருக்கும் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜையும், அமியோ காரின் அதே 1.0 லிட்டர் எஞ்சின் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜை தரும் வகையில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும்.

தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையே 1.0 லிட்டர் எஞ்சினான மாற்றி ஃபோக்ஸ்வேகன் களமிறக்க இருக்கிறது. புதிய எஞ்சின் பவரை வெளிப்படுத்தும் திறன் மற்றும் மைலேஜில் சிறப்பானதாக இருக்கும் என்பது முக்கிய விஷயம்.

புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படாது என்பதும் இப்போது கிடைத்திருக்கும் தகவல். போலோ காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும், அமியோ கார் ரூ.5.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட போலோ மற்றும் அமியோ கார்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை. எனினும், கூடிய விரைவில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்கள் பெட்ரோல் மாடல் தவிர்த்து, சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். போலோ காரின் ஜிடி மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.


Click it and Unblock the Notifications








