இந்தியா 2.O திட்டத்தில் 4 புதிய கார்களை களமிறக்குகிறது ஃபோக்ஸ்வேகன்!
இந்தியா 2.O திட்டத்தின் கீழ் 4 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்துள்ளது.
இந்தியா 2.O திட்டத்தின் கீழ் 4 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் கார் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனவே, இந்திய கார் சந்தையில் வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் தீவிர திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்தியாவில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், கார் வர்த்தகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் விதத்தில் இந்தியா 2.O என்ற திிட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.

அதன்படி, இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிர்வாக இயக்குனர் குர்பிரதாப் போபராய் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இவர் ஃபோக்ஸ்வேகன் நிர்வாக இயக்குனராகவும் வரும் ஜனவரி 1ந் தேதி பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், இந்தியா 2.O திட்டம் குறித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா வர்த்தகத்தை இந்தியாவில் பொதுவான வர்த்தக கொள்கைகளின் அடிப்படையில் கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறி இருக்கிறார்.

அடுத்து, இந்தியாவில் 4 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கார்களில் அதிக அளவில் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்படும் உள்ளூர் உதிரிபாகங்களை பயன்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்," என்று தெரிவித்தார்.

இந்த புதிய கார்கள் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவிற்காக உருவாக்கப்படும் MQB A0 IN என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கின்றன. இதில், இரண்டு புதிய செடான் கார்களும், இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களும் அடங்கும்.

முதல் மாடலானது ஸ்கோடா விஷன் எக்ஸ் கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக இருக்கும். வரும் 2019 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் காட்சிக்கு கொண்டு வரப்படும். இது ஐரோப்பிய நாடுகளுக்கான மாடலாக இருக்கும்.

இதே மாடல் 2020ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆனால், ஐரோப்பிய மாடலைவிட அதிக நீளம் கொண்டதாக இந்த மாடல் மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 130 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மாற்ற வேண்டும் என்பதால், இந்த எஞ்சின் வருவதில் சந்தேகம் நிலவுகிறது.

இரண்டாவது எஸ்யூவி மாடலாக ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் அடிப்படையிலான புதிய எஸ்யூவி மாடலாக இருக்கும். தென் அமெரிக்க மாடலை ஒத்திருக்கும் அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அடுத்ததாக இரண்டு புதிய செடான் கார்களை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








