புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு முன்பதிவு துவங்கியது!
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் அறிமுக விபரம், முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட பல தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வெளிநாடுகளில் அறிமுகமானது. இந்த நிலையில், மிக நீண்ட தாமதத்திற்கு பின்னர் இந்தியாவில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். மேலும், அடுத்த மாதம் 3ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு நாளும் குறித்துவிட்டது.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே இந்தியாவில் வர இருக்கிறது.
இந்த புதிய மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.
தற்போது பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சினுக்கு விடை கொடுக்கப்பட இருக்கிறது. அண்மையில் வந்த கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் புதிய எலான்ட்ரா காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வர இருக்கிறது புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார். அத்துடன், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்ம், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆக்டிவ் லேன் கன்ட்ரோல், ஆட்டோனாமஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற இருக்கிறது.
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது. ஹோண்டா சிவிக், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








