2020 ஆட்டோ எக்ஸ்போ தேதிகள் விபரம் வெளியானது!
அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சி நடைபெறும் தேதிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்தியன் எக்ஸ்போ மார்ட் அரங்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச வாகன கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன கண்காட்சிகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

இந்திய ஆட்டோ எக்ஸ்போவிற்கான ஏற்பாடுகளை இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம், இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இந்திய தொழிற்துறை சம்மேளனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவிற்கான தேதிகள் விபரம், இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் 12ந் தேதி வரை 2020 சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ நடைபெற இருக்கின்றது.

இந்த ஆட்டோ எக்ஸ்போவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏராளமான புதிய கார் மற்றும் இருசக்கர வாகன மாடல்கள், கான்செப்ட் எனப்படும் மாதிரி வாகன மாடல்களும் இதில் காட்சிப்படுத்தப்படும். இந்த வாகன கண்காட்சியை பார்வையிடுவதற்காக உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் வருகை தருவர்.

இந்தியாவில் வர்த்தகம் செய்யும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தங்களது புதிய வாகன மாடல்களை இந்த ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகம் செய்வதும் வழக்கமாக இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

2020ம் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பதற்கு வாகன நிறுவனங்களுக்கான பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேதி விபரம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1986ம் ஆண்டு முதல் இந்திய ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இடநெருக்கடி காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் கிரேட்டர் நொய்டாவிற்கு மாற்றப்பட்டது. எனினும், கனரக மற்றும் உதிரிபாகங்களுக்கான ஆட்டோ எக்ஸ்போ தொடர்ந்து டெல்லி பிரகதி மைதானத்தில்தான் நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








