2020 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்-ன் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிவு...
ஹூண்டாய் நிறுவனத்தால் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஐ20 ஆக்டிவ் மாடலின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் எடுக்கப்பட்டுள்ள இப்போட்டோக்களில் ஐ20 கார், முழுவதும் மறைக்கப்பட்டு ஆந்திரா பிரதேச நம்பர் ப்ளேட்டில் உள்ளது.

ஐ20 ஆக்டிவ்வின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் ஐரோப்பாவில் சோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன. ஐ20 ஆக்டிவ்-ன் முந்தைய மாடல் சென்னையில் ஹூண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் ஆந்திராவில் உள்ள கியா மோட்டார்ஸின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ள இம்மாடலின் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 தரத்தால் தற்போதுள்ள மாடலை விட அதிகமாக 82 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆறு வேக நிலைகளை கொடுக்கக்கூடிய ஆட்டோமேட்டிக் சிவிடி யூனிட் இரு தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

டீசல் என்ஜின், தற்போதைய மாடலில் உள்ள 1.4 லிட்டர் டீசல் என்ஜினாக இல்லாமல், நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜினாக கியா செல்டோஸ் எஸ்யூவி வெளிப்படுத்தக்கூடிய 114 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த என்ஜின்களுடன் ஐ20 காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வும் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட இந்த 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 118 பிஎச்பி பவரையும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த நியூ ஜென்ரேஷன் ஐ20 காரில் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் டிசைன்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன. இருவிதமான கலரில் அலாய் சக்கரங்கள், பெரிய அளவிலான க்ரில் பகுதி, புதிய வடிவில் ஹெட்லைட்ஸ், ஃபாக் லைட்ஸ் மற்றும் பின்புற எல்இடி லைட் போன்றவை இந்த புதிய டிசைனில் அடங்கும்.

காரின் உள்ளே, நியூ டிசைனில் ஸ்மார்ட்போன் மற்றும் வாய்ஸ் கமெண்ட்ஸ் போன்ற ஸ்மார்ட்டான இணைப்புகளுடன் கூடிய டேஸ்போர்டு உள்ளது. நிம்மதியான உட்புற சூழலை கொடுப்பதற்காக சன்ரூப் அமைப்பும் உள்ளது.

பிஎஸ்6 தரத்திற்கு இந்த கார் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இதன் விலை தற்போதைய மாடலை விட கட்டாயம் அதிகமாக நிர்ணயிக்கப்படும். இந்த ஐ20 ஆக்டிவ் இந்திய சந்தைக்கு அறிமுகமாகும் போது இதற்கு போட்டி கொடுக்க மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா, ஹோண்டா ஜாஸ், வோல்ஸ்வேகன் போலோ மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா அல்ட்ராஸ் போன்ற கார்கள் தயாராக இருக்கும்.

ஹூண்டாய் நிறுவனம், தனது அனைத்து மாடல்களுக்கும் சரியான விகிதத்தில் சிறப்பம்சங்களை வழங்கிவிடும் நிறுவனம் ஆகும். அதனால் இந்த ஐ20 மாடலில் நிறைய சிறப்பம்சங்களை எதிர்ப்பார்க்கலாம். இந்திய சந்தையில் ஐ20 மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகினால், வோல்ஸ்வேகனின் போலோ ஜிடிக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications








