புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு எஸ்யூவி மாடல் எம் க்ளாஸ். இந்தியாவில் இதுவரை 13,000 யூனிட்டுகளுக்கு மேல் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய தலைமுறை மாடலாக இந்த எம் க்ளாஸ் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது எம் க்ளாஸ் எஸ்யூவி நான்காம் தலைமுறை மாடலாக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் ஜிஎல்இ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. முதல் தலைமுறை மாடலில் இருந்த பல்வேறு டிசைன் அம்சங்கள் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட வீல் பேஸ் 80 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு இருப்பதால் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். இந்த காரில் இரண்டு 12.3 அங்குல திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த காரின் 400டீ என்ற டீசல் மாடலில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 330 எச்பி பவரையுிம், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அடுத்து 300 டீ என்ற டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 245 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் 367 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அனைத்து எஞ்சின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியானது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவையொட்டி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆடி க்யூ7, வால்வோ எக்ஸ்சி90 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 ஆகிய சொகுசு எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








