பெங்களூரில் பாதி மாறப்போகிறது... கர்நாடக மாநில அரசு செய்யவுள்ள அதிரடி மாற்றம் இதுதான்...
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அம்மாநில அரசு அதிரடியான மாற்றம் ஒன்றை செய்யப்போகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வழக்கமான வாகனங்கள்தான் தற்போது வரை உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் சகாப்தம் முடிவுக்கு வர தொடங்கி விட்டது. மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல தலையெடுக்க தொடங்கியுள்ளன.

எதிர்கால உலகை ஆளப்போவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் என்பதே ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. கணிப்பாக மட்டுமல்லாது அறுதியிட்டும் கூற முடியும். நிச்சயமாக எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலத்தில் நமது போக்குவரத்திற்கு பேருதவி செய்ய போகின்றன.

பெட்ரோல், டீசல் நிரப்பும் வகையில் ஆகும் செலவு கணிசமாக குறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது போன்ற காரணங்களால்தான், உலக மக்கள் மனதில், எலெக்ட்ரிக் வாகனங்கள் வெகு வேகமாக இடம் பிடித்து வருகின்றன.

ஆனால் ஏனோ இந்திய மக்களிடம் மட்டும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பெரிதாக சென்று சேரவில்லை. விலை சற்று அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை என இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அத்தகைய பிரச்னைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் மத்தியில் இன்னும் சற்று தயக்கம் நிலவி வந்தாலும், பல்வேறு மாநில அரசுகள் இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக களமாடி கொண்டிருக்கின்றன. கேரளா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இம்மாநிலங்களில் உள்ள பெரு நகர பொது போக்குவரத்து முறைகளில், பெட்ரோல், டீசலில் இயங்கும் வழக்கமான பஸ்களுக்கு பதிலாக, அதிக அளவிலான எலெக்ட்ரிக் பஸ்களை புகுத்தும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் அரசாங்க கார் உள்ளிட்ட வாகனங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட மாநிலங்களுக்கு கர்நாடகா சற்றும் சளைத்தது அல்ல. சுத்தமான போக்குவரத்து முறைகளை ஊக்குவித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக திகழும் கர்நாடகா, இந்த விஷயத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பது சிறப்பு.

இந்த சூழலில் கர்நாடக மாநில அமைச்சரான ஜார்ஜ், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, பெங்களூர் நகரில் உள்ள கர்நாடக மாநில அரசு பணியாளர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களில், 50 சதவீத வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படவுள்ளன.

இதற்கு கர்நாடக மாநில அரசு மிக நீண்ட நாட்களை எல்லாம் எடுத்து கொள்ளப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநில அமைச்சர் ஜார்ஜ் அறிவிப்பின்படி, நடப்பாண்டு இறுதிக்குள்ளாக 50% வாகனங்கள் எலெக்ட்ரிக்காக மாற்றம் செய்யப்பட்டு விடும்.

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது அமைச்சர் ஜார்ஜ் இந்த தகவலை வெளியிட்டார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக அரசும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேற்கண்ட மாநிலங்களை போல் வேகம் இல்லை என்றாலும், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
NOTE: Images Used Are Only For Representational Purpose Only


Click it and Unblock the Notifications








