புதிய தலைமுறை ஆடி ஏ6 கார் இந்திய அறிமுக தேதி விபரம்
புதிய தலைமுறை ஆடி ஏ6 காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆடி நிறுவனத்தின் நடுத்தர உயர்வகை சொகுசு செடான் கார் மாடல் ஏ6. சந்தைப் போட்டிக்கு தக்கவாறு இந்த கார் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஆடி நிறுவனம் தனது முதல் மாடலாக ஏ6 சொகுசு காரை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.

புதிய ஆடி ஏ6 கார் எட்டாவது தலைமுறை மாடலாக அறிமுகமாக இருக்கிறது. இந்த கார் தற்போதைய ஏழாவது தலைமுறை மாடலைவிட 7 மிமீ நீளத்திலும், 12 மிமீ அகலத்திலும், 2 மிமீ உயரத்திலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆடி ஏ6 சொகுசு செடான் கார் புதிய டிசைன் அம்சங்களுடன் மாறி இருக்கிறது. ஆடி கார்களுக்குரிய பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, கச்சிதமான எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், மெல்லிய பம்பர் அமைப்புடன் முகப்பு வசீகரமாக உள்ளது. இந்த காரில் 18 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆடி ஏ6 காரின் உட்புறத்திலும் முற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு தொடுதிரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அதாவது, 10.1 அங்குல தொடுதிரை அமைப்பும், அதற்கு கீழாக 8.6 அங்குல தொடுதிரை அமைப்பும் இடம்பெற்றிருக்கும. 12.3 திரையுடன் அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய ஆடி ஏ6 காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 7 ஸ்பீடு எஸ்-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இதன் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டீசல் மாடல் சற்று தாமதமாக வரும் என்று தெரிகிறது. டீசல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரிப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஆடி ஏ6 சொகுசு காருக்கு ரூ.5 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. வரும் 24ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








