ரூ.10 லட்சத்தில் வரும் புதிய ஜீப் எஸ்யூவி பற்றி அசரடிக்கும் செய்தி!!
அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் ஆஃப் ரோடு எஸ்யூவிகளை தயாரிப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அந்த நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கிய ஜீப் காம்பஸ் நல்ல வரவேற்பையும், மதிப்பையும் பெற்று தந்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில், அடுத்த தயாரிப்பையும் களமிறக்க உள்ளது ஜீப். இந்த புதிய மாடல் ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட விலை குறைவாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. அதாவது, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் 526 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய எஸ்யூவி தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் உறுதிப்படுத்தி இருக்கிரது.

இந்த நிலையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் வரும் புதிய ஜீப் எஸ்யூவி குறித்த ஒரு தகவல் ஜீப் பிரியர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதாவது, ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி சிறந்த ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள பல காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகின்றன. ஆனால், ஏனைய மாடல்கள் அனைத்தும் சாஃப்ட்ரோடர் எனப்படும் வகையை சார்ந்த எஸ்யூவி மாடல்களாக உள்ளன.

இந்த நிலையில், ஜீப் நிறுவனம் தனது பாரம்பரியம் மிக்க ஆஃப்ரோடு எஸ்யூவி தயாரிப்பு நுட்பத்துடன் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரெயில்ஹாக் வேரியண்ட் போலவே, புதிய காம்பேக்ட் எஸ்யூவியிலும் ட்ரெயில்ஹாக் என்ற விசேஷ ஆஃப்ரோடு வேரியண்ட் எதிர்பார்க்கப்படுகிறது.

இது எஸ்யூவி பிரியர்களையும், ஆஃப்ரோடு வாகன பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம், விசேஷ டிரைவிங் மோடுகளுடன் வர இருப்பதாக தெரிகிறது.

புதிய ஜீப் காம்பேக்ட் எஸ்யூவியானது மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கவுனில் உள்ள கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படும். வலதுபக்க டிரைவிங் ஆப்ஷன் உள்ள நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் புதிய எஸ்யூவியின் அறிமுகத்தையடுத்து, ரஞ்சன்கவுன் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஃபியட் க்றைஸ்லர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜீப் நிறுவனத்தின் புதிய எஸ்யூவியானது தனித்துவமான தேர்வாக அமையும். ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் இந்த எஸ்யூவிக்கு பெரிய அளவிலான வரவேற்பை இந்தியாவில் பெற்றுத் தரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








