லெக்சஸ் பிராண்டின் முதல் சொகுசு எம்பிவி கார் குறித்த தகவல்கள்!
லெக்சஸ் நிறுவனத்தின் முதல் சொகுசு எம்பிவி ரக கார் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம் லெக்சஸ் பிராண்டில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலும் லெக்சஸ் சொகுசு கார்கள் நேரடியாக விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த சூழலில், லெக்சஸ் பிராண்டின் முதல் எம்பிவி ரக கார் மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

வரும் 16ந் தேதி சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் துவங்க இருக்கும் சர்வதேச ஆட்டோ ஷோவில் இந்த புதிய மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த கார் குறித்து ஆவலைத் தூண்டும் விதமாக டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய லெக்சஸ் எம்பிவி கார் LM என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த புதிய சொகுசு ரக எம்பிவி கார் LM 350 என்ற வேரியண்ட்டிலும், LM300h என்ற ஹைப்ரிட் வேரியண்ட்டிலும் வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய எம்பிவி கார் 'Luxury of space' என்ற ஸ்லோகனுடன் களமிறக்குகிறது லெக்சஸ். எனவே, மிகச் சிறந்த இடவசதியையும், சொகுச அம்சங்களையும் பெற்றிருப்பது இப்போதே உறுதியாக தெரிகிறது.

லெக்சஸ் ES செடான் காரின் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இந்த புதிய எம்பிவி காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் ஆப்ஷனிலும் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மாடலானது 218 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும்.

தவிரவும், 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் இந்த புதிய லெக்சஸ் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த இரண்டு மாடல்களிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த புதிய லெக்சஸ் எம்பிவி கார் முதலில் சீனா மற்றும் தைவான் நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

தற்போது இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் இஎஸ், எல்எஸ் ஆகிய செடான் கார் மாடல்களையும், என்எக்ஸ், ஆர்எக்ஸ் ஆகிய எஸ்யூவி ரக கார்களையும் லெக்சஸ் விற்பனை செய்கிறது. பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் வால்வோ ஆகிய கார் நிறுவனங்களுடன் லெக்சஸ் மாடல்கள் போட்டி போடுகின்றன.


Click it and Unblock the Notifications








