மெர்சிடிஸ் ஜிஎல்பி எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகமாகிறது!
புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவி இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வரும் 16ந் தேதி துவங்க இருக்கும் 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்பி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான திட்டம் மெர்சிடிஸ் பென்ஸ் வசம் உள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் விஷன் என்டர் ஜி- ஃபோர்ஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான விலையில் புதிய ஜிஎல்பி மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் மற்றும் பி க்ளாஸ் கார்கள் உருவாக்கப்பட்ட MFA2 என்ற ஃப்ரண்ட் வீல் டிரைவ் பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர பட்ஜெட் விலை கொண்ட சொகுசு எஸ்யூவியாக இருக்கும்.

இந்த புதிய சொகுசு எஸ்யூவி கார் 4.6 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மேலும், 500 லிட்டர் பூட்ரூம் இடவசதியையும் அளிக்கும். இந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். 7 சீட்டர் மாடலாதனது 120 மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவியில் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். ஏ க்ளாஸ் கார் போன்று வட்ட வடிவிலான ஏர் வென்ட்டுகள், ஒருங்கிணைந்த வசதிகளை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்படும்.

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த எஞ்சின் 150 எச்பி பவரையும், 190 எச்பி பவரையும் அளிக்கும் இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் ஹைப்ரிட் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹைப்ரிட் மாடலில் இருக்கும் பேட்டரி மூலமாக 70 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மெக்சிகோவில்தான் முதலில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இருக்கும்.
Source: Autocar India


Click it and Unblock the Notifications








