இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த எம்பிவி... அமிதாப் பச்சன் வாங்கிய புதிய கார் இதுதான்
பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மிகவும் விலை உயர்ந்த எம்பிவி ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம் விலை உயர்ந்த பல்வேறு கார்கள் உள்ளன. இதில், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் (Rolls Royce Ghost) ஒன்றும் அமிதாப் பச்சனிடம் இருந்தது. ஆனால் அந்த காரை அமிதாப் பச்சன் சமீபத்தில் விற்பனை செய்து விட்டார்.

ஆனால் அதற்கு பதிலாக மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் எம்பிவியை (Mercedes-Benz V-Class MPV) அமிதாப் பச்சன் தற்போது வாங்கியுள்ளார். சொகுசான இன்டீரியர் மற்றும் வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுக்க மிகவும் பிரபலமான மாடலாக இது திகழ்ந்து வருகிறது. 68.40 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், கடந்த ஜனவரி மாதம் இந்திய மார்க்கெட்டிலும் மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் எம்பிவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மும்பை நகரில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் டீலர்ஷிப் ஒன்றில் அமிதாப் பச்சன் தனது புதிய வாகனத்தை டெலிவரி எடுத்துள்ளார். புதிய வாகனத்தை டெலிவரி பெறும்போது, அதன் முன்பாக நின்று கொண்டு அமிதாப் பச்சன் எடுத்த புகைப்படம் அவர் ரசிகர்களால் சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எக்ஸ்க்ளூசிவ் (லாங் வீல் பேஸ்) மற்றும் எக்ஸ்ப்ரஷன் (எக்ஸ்ட்ரா லாங் வீல் பேஸ்) ஆகிய இரண்டு வேரியண்ட்களில், மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் எம்பிவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், எக்ஸ்ப்ரஷன் வேரியண்ட்டின் விலை 68.4 லட்ச ரூபாய். அதே சமயம் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலை 81.9 லட்ச ரூபாய். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதில், எக்ஸ்ப்ரஷன் வேரியண்ட் 7 சீட்டர் மாடல் ஆகும். ஆனால் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் 6 சீட்டர் மாடல்தான். இருந்தபோதும் எக்ஸ்ப்ரஷன் வேரியண்ட்டை காட்டிலும் இதில் ஏராளமான சொகுசு வசதிகள் உள்ளன.

ஆனால் இதில் எந்த வேரியண்ட்டை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் ஒரு கோணத்தில் தெரியும் படியான புகைப்படம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வாகனத்தின் வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் சொகுசான அதே நேரத்தில் மிகவும் விலை உயர்ந்த எம்பிவி ரக வாகனம் என்றால், அது மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ்தான்.

இதில், 2,1 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 3,800 ஆர்பிஎம்மில் 160 பிஎச்பி பவரையும், 1,600 ஆர்பிஎம்மில் 380 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்க கூடிய வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 7-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது இன்ஜின் சக்தியை பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் எம்பிவி காரில், முழு எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 15-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம் (ஆப்ஷனல்) உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர 6 ஏர் பேக்குகள், லேன் அஸிஸ்ட், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் உள்பட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








