மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாங்கிய புது கார் இதுதான்! இந்தியாவின் மீது இவ்வளவு பக்தியா?
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. மஹிந்திரா நிறுவன கார்களுக்கு என இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மஹிந்திரா நிறுவனத்தை போலவே, அதன் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவும் மிகவும் புகழ்பெற்ற நபர்தான்.

மஹிந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். அவரது சுவாரஸ்யமான டிவிட்டர் பதிவுகள் அவ்வப்போது வைரலாகும். இதுதவிர நெட்டிசன்களின் கேள்விகளுக்கும் ஆனந்த் மஹிந்திரா நேரடியாக பதில் அளிக்க கூடியவர்.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தயாரிப்புகள் மீது ஆனந்த் மஹிந்திரா மிகுந்த ஆர்வம் கொண்டவர். மஹிந்திரா குழுமம் இன்று உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

ஆனந்த் மஹிந்திரா ஆட்டோ மியூசியம் ஒன்றை வைத்துள்ளார். இதில், அவர் அரிதான ஆட்டோமொபைல் தயாரிப்புகளை சேகரித்து பராமரித்து வருகிறார். காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மஹிந்திரா தார் காரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் மஹிந்திரா கேட்டு பெற்றார்.

பின்னர் அதனை தனது ஆட்டோ மியூசியத்திற்கு கொண்டு சென்று பராமரித்து வருகிறார். இதுதவிர தனது மஹிந்திரா நிறுவனம் வெளியிடும் பிரபல தயாரிப்புகளையும் உடனடியாக வாங்கி பராமரித்து கொண்டுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

இதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளான டியூவி300 (TUV300), டியூவி300 ப்ளஸ் (TUV300 Plus) மற்றும் எக்ஸ்யூவி500 (XUV500) உள்ளிட்ட கார்களை ஆனந்த் மஹிந்திரா வாங்கியுள்ளார். இந்த பட்டியலில் தற்போது அல்டுராஸ் ஜி4 காரும் இணைந்து கொண்டுள்ளது.

ஆம், மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தற்போது புதிய அல்டுராஸ் ஜி4 காரை வாங்கியுள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற லக்ஸரி தயாரிப்புகளில் ஒன்றான அல்டுராஸ் ஜி4 கார், எஸ்யூவி வகையை சேர்ந்தது ஆகும்.

அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரை டெலிவரி எடுத்த புகைப்படத்தை, ஆனந்த் மஹிந்திரா தற்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் தனது காருக்கு பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்கும்படி, அவர் நெட்டிசன்களை கேட்டு கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எனது அல்டுராஸ் ஜி4 காரை டெலிவரி எடுத்து விட்டேன். எனது டியூவி 300 ப்ளஸ் காருக்கு 'க்ரே கோஸ்ட்' (Grey Ghost) என பெயரிட்டுள்ளேன். அதேபோல் எனது புதிய அல்டுராஸ் ஜி4 காருக்கும் ஒரு அழகான பெயர் தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து கொண்டிருக்கும் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி திகழ்கிறது.

டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஃபோர்டு என்டேவர் (Ford Endeavour) உள்ளிட்ட கார்களுக்கு, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் கடும் சவால் அளித்து வருகிறது. இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 26.95 லட்ச ரூபாய். அதே நேரத்தில் டாப் எண்ட் 4X4 வெர்ஷன் 29.95 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரில், 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவர், 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

இதர மஹிந்திரா நிறுவன கார்களை போல், அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரிலும் ஏராளமான வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், 360 டிகிரி கேமரா சிஸ்டம், சன் ரூஃப், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த காரில் மொத்தம் 9 ஏர் பேக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த செக்மெண்ட்டில் இவ்வளவு அதிகமான ஏர் பேக்குகளை கொண்டிருக்கும் கார் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆனந்த் மஹிந்திரா டெலிவரி எடுத்துள்ள அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காருக்கு பொருத்தமான பெயரை சூட்டும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இதனால் பலர் போட்டி போட்டு கொண்டு பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர்.

இதில், பல பெயர்கள் இந்திய மொழிகளில் உள்ளன. இதனை பார்த்த ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மற்றொரு பதிவையும் வெளியிட்டார். இதில், ''இம்முறை இந்திய மொழியில் பெயர் சூட்டவே விரும்புகிறேன். பெயர்களை தொடர்ந்து பரிந்துரையுங்கள்'' என கூறியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தை உலக அளவில் பிரபலம் அடைய செய்தவரான ஆனந்த் மஹிந்திரா, தற்போது தனது காருக்கு ஆங்கிலத்தை விடுத்து ஏதேனும் ஒரு இந்திய மொழியில் பெயர் சூட்ட முன்வந்திருப்பது பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.


Click it and Unblock the Notifications








