புதிய ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதுப்பொலிவுடன் கூடிய ஆடி ஏ4 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஆடி ஏ4 கார் நடுத்தர வகை சொகுசு கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதுப்பொலிவுடன் கூடிய கார் இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய மாடல் பிரிமீயம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஆடி ஏ4 காரின் முகப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த காரில் புதிய எல்இடி விளக்குகள், பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. ஆடி நிறுவனத்தின் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பனி விளக்குகள் அறையை சுற்றிலும் க்ரோம் அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 10 ஸ்போக்குகள் கொண்ட 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் புதிதாக 225/50 செக்ஷன் டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட்டுகள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவையும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஆடி ஏ4 காரில் புதிய டேஷ்போர்டு அமைப்பு, இரட்டை வண்ண இன்டீரியர், க்ரோம் அலங்கார ஆக்சஸெரீகள் ஆகியவற்றுடன் மிகவும் பிரிமீயமான இன்டீரியர் அமைப்புடன் வந்துள்ளது. இந்த காரின் சென்ட்ரல் கன்சோல் அமைப்பும் சிறப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. மணிக்கு 210 கிமீ வேகம் வரை செல்கிறது.

புதிய ஆடி ஏ4 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பிரிமீயம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.41.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டெக்னாலஜி வேரியண்ட் ரூ.45.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








