ஆடி க்யூ-8 எஸ்யூவிக்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு?
ஆடி க்யூ-8 சொகுசு எஸ்யூவி காருக்கு இந்தியாவில் ரகசிய முன்பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆடி நிறுவனத்தின் மிக உயரிய வகை எஸ்யூவி மாடலாக க்யூ-8 எஸ்யூவி ரக கார் வர இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் க்யூ குடும்ப வரிசையில் மிகவும் விலை உயர்ந்த கார் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் மிக நீண்ட காலமாக இந்திய மண்ணில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த புதிய கார் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக சில ஆடி கார் நிறுவனத்தின் டீலர்களில் முன்பதிவு ரகசியமாக செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆடி க்யூ-8 காருக்கு ரூ.1.10 கோடி முதல் ரூ.1.30 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 4 கதவுகள் கொண்ட கூபே ரக எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் எச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், டைனமிக் இண்டிகேட்டர்கள், 21 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன. உட்புறத்தில் இரட்டை தொடுதிரைகள் கூடிய கட்டுப்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள், வெதுவெதுப்பை பெறுவதற்கான ஹீட்டட் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.

புதிய ஆடி க்யூ-8 சொகுசு காரில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 286 பிஎஸ் பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 232 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த காரின் பெட்ரோல் மாடல்கள் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாக இருக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
Via- Motoroids


Click it and Unblock the Notifications








