ஆட்டோமொபைல் துறையை கை தூக்கிவிட இருக்கும் கடைசி ஆயுதம் இதுதான்!
வரலாறு காணாத விற்பனை சரிவை இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது. கார், பைக், கனரக வாகனங்கள் என அனைத்து துறைகளிலுமே விற்பனை பெரும் மந்த கதியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையின் சரிவு இந்திய பொருளாதாரத்தின் சரிவாகவே பாவிக்கப்படுகிறது. எனவே, ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கான சில திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த மாதம் அறிவித்தார்.

ஆனால், இந்த புதிய நடவடிக்கைகள் மூலமாக ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட கால அடிப்படையில் ஸ்திரமான திட்டங்கள் தேவை என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இந்திய வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின்( சியாம்) 59வது ஆண்டு மாநாடு டெல்லியில் நடந்தது. இதி்ல், ஆட்டோமொபைல் துறையை சார்ந்த உயரதிகாரிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில், பங்கேற்று பேசிய பலரும் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது 28 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சியாம் அமைப்பை சேர்ந்த அதிகாரிகளும் இந்த மாநாட்டின் மூலமாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி," ஆட்டோமொபைல் துறையின் கடினமான சூழலில் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

மேலும், ஆட்டோமொபைல் துறையினரின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும். அத்துடன், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வலியுறுத்த உள்ளோம்.

பெட்ரோல்,டீசலில் இயங்கும் வாகனங்களை தடை செய்வதற்கான எண்ணம் அரசுக்கு இல்லை. மின்சார கார்களுக்கு இணையாக ஹைப்ரிட் ரக வாகனங்களுக்குமான ஜிஎஸ்டி வரி நிர்ணயிப்பதற்கும் வலியுறுத்தப்படும்.

அதேநேரத்தில், பழைய வாகனங்களை ஒழிக்கும் திட்டத்தை விரைந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சில முக்கிய தகவல்களை கூறி அங்கு கூடியிருந்த ஆட்டோமொபைல் துறையினரின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தால் அது நிச்சயம் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்று அத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், தற்போதைய சூழலிலிருந்து ஓரளவு மீண்டு வருவதற்கு துணைபுரியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தனது கையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்கனவே கூறி இருக்கிறார். எனினும், அதுபற்றி ஜிஎஸ்டி கவுன்சிலிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். வரும் 20ந் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








