பஜாஜ் க்யூட் மின்சார குவாட்ரிசைக்கிள் வாகனம் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!
பஜாஜ் க்யூட் மின்சார குவாட்ரிசைக்கிள் வாகனம் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த தசாப்தம் துவங்குவதற்கு முன்னதாகவே மின்சார வாகனங்களுக்கான சந்தை மிக வலுவான இலக்கை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது. இந்த சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது க்யூட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் குவாட்ரிசைக்கிள் ரக வாகனத்தின் மின்சார மாடலை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அண்மையில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் அடுத்து இந்த க்யூட் நான்கு சக்கர வாகனத்தின் மின்சார மாடலையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனமானது க்யூ-கார் என்ற பேட்ஜ் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வலது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

எனவே, இந்த புதிய பஜாஜ் க்யூட் மின்சார மாடலானது முதலில் வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதன்பிறகு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்தியாவில் சட்டரீதியான பிரச்னை எழுந்ததால், க்யூட் பெட்ரோல் வாகனம் முதலில் ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில்தான் முதலில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த பாணியிலேயே இடது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த புதிய பஜாஜ் க்யூட் க்யூ-கார் மின்சார மாடலானது நகர்ப்புறத்தில் ஆட்டோரிக்ஷாக்களுக்கு மாற்றாக, மாசு உமிழ்வு இல்லாத வாகனமாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

சேத்தக் ஸ்கூட்டரை தொடர்ந்து இந்த புதிய க்யூட் மின்சார வாகனத்தை அர்பனைட் என்ற தனது மின்சார வாகனங்களுக்கான பிராண்டின் கீழ் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனே மற்றும் பெங்களூர் நகரில் இந்த புதிய வாகனம் முதலில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதைத்தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் மாடலைவிட அதிக விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், எரிபொருள் மற்றும் இயக்குதல் செலவு குறைவாக இருக்கும்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications








