இனி போலீஸாரிடம் நகல் ஆவணங்களை காட்ட வேண்டாம்... மாற்று வழியால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
இனி போலீஸாரிடம் நகல் ஆவணங்களை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாடு முழுவதும் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகன விதிமீறல்களே இல்லாத இந்தியாவாக மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதி, வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், புதிய விதி முன்னதாக விதிக்கப்பட்டு வந்த அபராதத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக வசூலிக்க வழி வகை செய்துள்ளது.

இதனை போலீஸார் சிறு கருனையுமின்றி, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது விதித்து வருகின்றனர். ஆகையால், வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் பரவலாக காணப்படுகின்றது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, போலீஸார் அதிரடி வேட்டையில், களமிறங்கியுள்ளனர். இதற்காக, கடுமையான வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு, அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, உரிய ஆவணங்களின்றி வாகனம் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், உடனே அவர்களுக்கு உச்சபட்ச அபராதத் தொகை வழங்கப்படுகின்றது.

பலர், வாகனத்திற்கான ஆவணத்தை நகல்களை வைத்திருப்பதில் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். ஆகையால், பல நேரங்களில் ஆவணம் இருந்தும் சிக்கலில் சிக்குகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக டிஜிலாக்கர் மற்றும் பாரிவாஹன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

ஆனால், இந்த ஆப் மூலம் காண்பிக்கப்படும் டிஜிட்டல் ஆவணங்களை, சில போலீஸார் ஏற்றுக் கொள்வதில்லை என கூறப்படுகின்றது. ஏன், தமிழகத்தில் கூட ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்று அபராதம் விதித்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

இதனை உடைத்தெறியும் வகையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு போலீஸார் டிஜி லாக்கர் மற்றும் பாரிவாஹன் ஸ்மார்ட்போன் செயலி மூலம் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்றுக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த டுவிட் ஒன்றையும் பெங்களூரு போலீஸார், அவர்களின் அதிகார டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதில், "சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்று மற்றும் காப்பீட்டு சான்று உள்ளிட்டவற்றின் டிஜிட்டல் ஆவணங்களை மாநில போலீஸார் ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், வாகன ஓட்டிகள் நகலுக்கு பதிலாக பாரிவாஹன் மற்றும் டிஜி லாக்கர் போன்றவற்றில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களையும் காவல்துறையினர் கேட்கும்போது காண்பிக்கலாம்" என தெரிவித்துள்ளது.

பெங்களூரு போலீஸார் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை, மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிஜிலாக்கர் என்பது இந்திய அரசாங்கத்தின்மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் டிஜிட்டல் சேமிப்பு தளமாகும். இது ஆதார் எண்ணை மையமாகக் கொண்டு பயன்படுத்தப்படக்கூடிய ஓர் செயலியாகும். ஆகையால், இதன் மூலம் முறைகேடு செய்வது என்பது சற்று கடினம் என்று கூறப்படுகின்றது.

இந்த செயலிமூலம் அரசு வழங்கும் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சேகரித்து வைத்துக் கொள்ளமுடியும். மேலும், தேவைப்படுகின்ற நேரத்தில் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.
இதேபோன்று, மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் செயலிதான் எம்பாரிவாஹன். இது, வாகனம் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் தளமாகும். ஆகையால், வாகனம் சார்ந்த ஆவணங்களை இதில் சேகரித்து வைப்பது மிக எளிதானது.

கடந்த 2000வது ஆண்டில் இயற்றப்பெற்ற தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்கள் ஒரிஜினல் ஆவணத்திற்கு இணையாக கருதப்பட வேண்டும் என்ற சட்டம் வருகிறது. இது இந்தியா முழுவதும் செல்லுபடியாகும்.

இதை நாம் பயன்படுத்த டிஜிலாக்கர் அல்லது எம் பரிவாகன் என்ற ஆப்பை டவுண்லோடு செய்து அதை நம் ஆதார் எண்ணை கொண்டு உறுதி செய்ய வேண்டும். அதன் பின், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு ஆவணத்தின் எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும்.

இது வெறும் சான்றிதழாக மட்டும் அல்லாமல் போலீசாரின் வழக்குகளை சுலபமாக்கவும் பயன்படுகிறது. போலீசார் ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அந்த வாகனம் குறித்த தகவலை இ செல்லான் சிஸ்டத்தில் பதிவேற்றினால் அதன் மூலம் அந்த வாகனங்களின் ஆவணங்களை பார்க்க முடியும்.

மேலும் அதை முடக்கவும் எதிர்காலத்தில் அந்த வாகனம், இந்தியாவில் எந்த மூலையில் வாகன சோதனையில் ஈடுபட்டாலும் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யும் திட்டமும் அரசிடம் உள்ளது.

அதே போல் புதிய வாகனங்களுக்காக வழங்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ், மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் குறித்த தகவல்கள் நேரடியாக இன்சூரன்ஸ் இன்பர்மேஷன் போர்டு வழியாக வாகன் டேட்டாபேஷிற்கு சென்று விடும்.

இந்த தகவல்கள் தினம் தோறும் எம்பரிவாகன் மற்றும் இ செல்லான் ஆகிய தளத்திற்கு சென்றுவிடும். இதன் மூலம் இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தை அதிகாரிகளால் கண்டறிய முடியும்.
ஒரு வாகனம் எம் பரிவாகன், மற்றும் இ செல்லான் ஆகிய பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை அவர்கள் ஆவணமாக பயன்படுத்த முடியும். பேப்பர் காப்பிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


Click it and Unblock the Notifications








