கார் வாங்கலையோ கார்... கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாருதி!
கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதையடுத்து, மாருதி கார் நிறுவனம் ஆஃபர்களை அள்ளி வீசத் துவங்கியிருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் விற்பனை கடந்த பல மாதங்களாகவே கணிசமாக குறைந்துவிட்டது. இதனால், அந்நிறுவனம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பில் இருக்கும் கார்களை விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

மேலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.பொதுவாக, மாருதி கார் நிறுவனத்திடம் இருந்து தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளை எப்போதுமே எதிர்பார்க்க முடியாது.

குறிப்பாக, அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கு ஒரு நயா பைசாகூட சேமிப்புச் சலுகைகளை பெற முடியாது. இந்த நிலையில், தற்போது விற்பனை வெகுவாக குறைந்து போன நிலையில், புதிய கார்களை வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை மாருதி சுஸுகி வழங்குவது தெரிய வந்துள்ளது.

வாடிக்கையாளர்களை மொபைல்போன் மூலமாக தொடர்பு கொண்டு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் குறித்து விபரங்களை தெரியப்படுத்தி வருகிறது. அதாவது, பழைய மாருதி காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், சிறப்பு சேமிப்புச் சலுகையாக ரூ.25,000 மற்றும் கார்ப்பரேட் போனசாக ரூ.5,000 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ.50,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், பேரம் பேசினால் கூடுதல் சேமிப்பை பெறும் வாய்ப்பும் இருக்கிறது. வரும் 31ந் தேதி வரை மட்டுமே இந்த சலுகை என்று மாருதி டீலர் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

எனது டிசையர் காரை எக்ஸ்சேஞ்ச் செய்து, எந்த புதிய காரை தேர்வு செய்தாலும், ரூ.50,000 மதிப்புடைய சிறப்புச் சேமிப்பு சலுகைகளை பெற முடியும் என்று பெங்களூரில் உள்ள மாருதி டீலர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லாயல்டி போனஸ் குறித்து கேட்டதற்கு, விற்பனை பிரதிநிதியிடம் இதுகுறித்து பேசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, புதிய மாருதி கார் வாங்க திட்டமிடுவோர் உடனடியாக அருகிலுள்ள மாருதி டீலரை தொடர்பு கொண்டு ஆஃபர் குறித்து கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேலும், அதிகபட்ச தள்ளுபடியை பெறுவதற்கு முடிந்தவரை பேரம் பேசும் தருணமாகவும் இதனை குறிப்பிடலாம்.

மாருதி மட்டுமின்றி, பெரும்பாலான கார் நிறுவனங்கள் இருப்பை குறைப்பதற்காக பல்வேறு சேமிப்புச் சலுகைகளை பண்டிகை காலத்தின் பெயரால் வழங்கும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகபட்ச சேமிப்பை புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது. விரிவானத் தகவல்களை டீலரை தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








