புதிய பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது. இதுவரை விற்பனையில் இருந்த 530ஐ ஸ்போர்ட் லைன் என்ற வேரியண்ட்டிற்கு மாற்றாக அறிமுகமாகி உள்ளது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் 520டீ மற்றும் 530டீ ஆகிய இரண்டு வேரியண்ட்டிற்கு இடையிலான விலை கொண்ட வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விலக்கப்பட்டுள்ள 530ஐ ஸ்போர்ட் லைன் கார் ரூ.53.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.59.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களில் பயன்படுத்தப்படும் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் விசேஷ பூச்சுடன் கூடிய முன்புற க்ரில், மிரட்டலான பம்பர் அமைப்பு, அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய ஏர் டேம் பகுதி, இரட்டை வண்ணத்திலான பின்புற பம்பர் ஆகியவை கவர்ச்சியை கூட்டுகின்றன.

மேலும், காரின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள சைடு ஸ்கர்ட்டுகள், புதிய அலாய் வீல்கள், நீல வண்ண எம் பிரேக் காலிபர்கள், எம் வரிசை காருக்குரிய பேட்ஜ் ஆகியவை சாதாரண 5 சீரிஸ் காரிலிருந்து தனித்துவப்படுத்துகிறது.

உட்புறத்திலும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், அலுமினியம் வலையுடன் கூடிய அலங்கார அம்சங்கள், ஸ்போர்ட்ஸ் லெதர் இருக்கைகள், 6 வண்ணங்களில் ஒளிரும் மூட் லைட்டுகள், வசீகரமான டகோட்டா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இன்டீரியரை பிரிமீயமாக காட்டுகிறது.

தவிரவும், 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றிலும் ஓட்டுனர் பார்த்துக்கொள்வதற்கான கேமரா, ஹார்மன் கர்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 12.3 அங்குல திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கை அசைவு மூலமாக சாதனத்தை இயக்கும் வசதி மற்றும் ரிமோட் பார்க்கிங் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

மேலும், சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. மேலும், லான்ச் கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் காரானது அல்பைன் ஒயிட், பிளாக் சஃபையர், மெடிட்டாரானியன் புளூ மற்றும் புளூஸ்டோன் மெட்டாலிக் ஆகிய 4 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் உள்ளிட்ட மாடல்களுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் போட்டி போடுகிறது. இந்த காரின் தனித்துவமான அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








