சென்னையில் உருவாகவுள்ள பிஎம்டபிள்யூ-ன் எலக்ட்ரிக் கார்கள்... தலைமை அதிகாரி அறிவிப்பு
ஜெர்மன் நாட்டை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, எலக்ட்ரிக் வாகனங்களை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் இயக்கும் மினி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். இதனால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து விரைவில் இந்தியாவிற்கான எலக்ட்ரிக் கார்களை எதிர்பார்க்கலாம்.

இதுகுறித்து மினி ப்ராண்ட்டின் ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கத்திய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் தலைமை அதிகாரியுள்ள ஃபிராங்கோயிஸ் ரோகா கூறுகையில், இந்திய மார்க்கெட் எப்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தயாராகிறதோ, அப்போது எங்களது நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

எங்களது சென்னை தொழிற்சாலையில் வாடிக்கையாளர்களை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டு எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பை ஆரம்பிக்கவுள்ளோம். இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம் என கூறினார். எலக்ட்ரிக் வாகனங்களின் தோற்றம் இந்தியாவின் விற்பனை திறனை பொறுத்து வடிவமைக்கப்படும். இந்திய கார்களில் சார்ஜிங் தொழிற்நுட்பம் பயன்பாட்டிற்கு வர இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது எனவும் ஃபிராங்கோயிஸ் ரோகா கூறியுள்ளார்.

மேலும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றும், மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் இந்திய அறிமுகத்திற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் காத்துக்கொண்டிருக்கிறது. அவை எலக்ட்ரிக் கார்களை வெளியிட துவங்கியவுடன் தனது வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் எல்லாம் ஏற்கனவே நமக்கு தெரிந்ததே. புதிய தகவலாக மினி ப்ராண்ட் தனது சொந்த தயாரிப்பில் வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது. இதற்காக இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள 70 சதவீத பெட்ரோல் என்ஜின் கார்களில் சுமார் 90 சதவீதத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒதுக்கி வைத்துள்ளது. இந்தியாவில் டீசல் என்ஜின் கார்களின் மீதான மோகம் குறைந்து வருவதால், இவ்வாறு பெட்ரோல் என்ஜின் கார்களை பெரும்பான்மையாக அறிமுகப்படுத்துவதாக மினி நிறுவனம் கூறியுள்ளது.

மினி நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் 700 யூனிட் கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். இதனால் ஜப்பான் மார்க்கெட்டிற்கு அடுத்ததாக மினி நிறுவனத்திற்கு மிக பெரிய விற்பனை சந்தையாக இந்தியா திகழ்கிறது. இந்நிறுவனத்தின் 10 விற்பனை மையங்கள் தற்போதைக்கு இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்களது விற்பனை மையங்கள் இல்லாத நகரங்களிலும் தங்களை பிரபலப்படுத்தி கொள்ள மினி நிறுவனம் கடுமையாக முயற்சிக்களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இத்தகைய நகரங்களில் நடமாடும் மையங்களை உருவாக்கி உள்ள இந்நிறுவனம் இந்தியாவில் புதிதாக களமிறங்கும் நிறுவனங்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இவ்வாறு சமீபத்தில் மினி நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்ற நிறுவனம் எம்ஜி மோட்டார்ஸ் ஆகும்.

தற்சமயம் இந்தியாவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடமாடும் விற்பனை மையங்களில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் மற்ற உலக நாடுகளின் மார்க்கெட்டிற்கு இணையாக தனது பிரபல மாடலான க்ளப்மேனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவும் மினி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி கார் தயாரிப்புகளும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை களமிறக்கவுள்ளது, இந்திய சந்தை கிட்டத்தட்ட எலக்ட்ரிக் கார்களுக்கு தயாராகிவிட்டதை காட்டுகிறது. இந்திய அரசாங்கமும் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டிற்கு உறுதுணையாக சில திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்தால், பிஎம்டபிள்யூ போன்ற மற்ற உயர்தர கார் நிறுவனங்களும் இந்தியாவில் தைரியமாக தொழில் தொடங்கும்.


Click it and Unblock the Notifications








