புதிய பிஎம்டபிள்யூ எம்-5 காம்படிஷன் பெர்ஃபார்மென்ஸ் இந்தியாவில் அறிமுகம்!
புதிய பிஎம்டபிள்யூ எம்-5 காம்படிஷன் பெர்ஃபார்மென்ஸ் வகை சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சாதாரண சொகுசு கார்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதி செயல்திறன் மிக்க மாடல்கள் எம் என்ற விசேஷ பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு காரின் அடிப்படையிலான அதிசெயல்திறன் வாய்ந்த எம்-5 காரின் காம்படிஷன் மாடல் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள எம்-5 ஸ்டான்டர்டு மாடலைவிட இதன் எஞ்சின் கூடுதல் செயல்திறனை வழங்க வல்லது.

இந்த புதிய எம்-5 மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விசேஷ கருப்பு வண்ணத்திலான சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு, சைடுமிரர்கள், சைடு ஏர் வென்ட்டுகள், ரியர் டிஃபியூசர் அமைப்பு மற்றும் ஸ்பாய்லர் கூடுதல் அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் சைடு ஸ்கர்ட்டுகள், இரட்டை சைலென்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், எம்-5 பிராண்டு பட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் கூரையானது கார்பன் ஃபைபர் ரீ இன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக் என்ற விசேஷ கலவையிலான உறுதியான கூரை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எம்-5 காம்படிஷன் மாடலில் வி8 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 625 எச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்-5 ஸ்டான்டர்டு மாடலின் எஞ்சினைவிட இந்த காம்படிஷன் மாடலின் எஞ்சின் 25 எச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும்.

இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் எக்ஸ்-ட்ரைவ் என்ற விசேஷ ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்த்ை 3.3 வினாடிகளில் எட்டிவிடும்.

உட்புறத்தில் எம் மல்டி ஃபங்ஷன் ஸ்போர்ட் இருக்கைகள், விசேஷ அட்ஜெஸ்ட் வசதியுடன் சீட் பெல்ட்டுகள், லெதர் உறையுடன் மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல் சிஸ்டம், ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதி, ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட், 600 வாட் திறனுடன் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம்,12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் வகை கார் மாடல் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.1.55 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். நாட்டிலுள்ள அனைத்து பிஎம்டபிள்யூ டீலர்களிலும் இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








