உலகின் நீளமான மின்சார பஸ் அறிமுகம்: ஒரே நேரத்தில் 250 பயணிகள் செல்லலாம்!
உலகின் மிக நீளமான மின்சார பஸ் மாடலை பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பஸ்சின் படங்கள் மற்றும் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் மின்சார பஸ் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார பஸ்கள் புனே உள்ளிட்ட நகரங்களில் சேவைக்கு வந்துவிட்டன. இந்த நிலையில், BYD K12A என்ற பெயரிலான உலகின் மிக நீளமான மின்சார பஸ் மாடலை அந்நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.

சீனாவின் ஷென்ஸென் பகுதியிலுள்ள அந்நிறுவனத்தின் தலைமையக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய மின்சார பஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பஸ் 27 மீட்டர் நீளம் கொண்டது. ஆர்டிக்குலேட் எனப்படும் தொடர் பேருந்து வகையை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாசு உமிழ்வு பிரச்னை இல்லாத இந்த மின்சார பஸ்சில், ஒரே நேரத்தில் 250 பேர் பயணிக்க முடியும். சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு ஏதுவானதாக இருக்கிறது.

இந்த பஸ் மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும் திறன் மிக்கது. பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில், 300 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

இந்த பஸ்சில் டிராக்ஷன் கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய பாதுகாப்பு வசதியாக இருக்கும். மேலும், சாதாரண சாலைகளில் 2 வீல் டிரைவ் சிஸ்டத்திலும், சற்று செங்குத்தான அல்லது சமதளமற்ற சாலைகளில் செல்லும்போது 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை பயன்படுத்தி இயக்கலாம்.
இந்த பஸ் உலக தரத்துடன் கூடிய அலாய் பாடி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சின் பராமரிப்பு செலவும் மிக குறைவாக இருக்கும் என்றும் பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருநகரங்களில் மாசு உமிழ்வு பிரச்னை இல்லாமல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான இந்த பஸ் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் இந்த பஸ் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








