எம்ஜி ஹெக்டருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு... இந்தியாவில் கால் பதிக்க அலைமோதும் சீன நிறுவனங்கள்!
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்த பெரும் வரவேற்பை பார்த்து, இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு சீன நிறுவனங்கள் அலை மோதி வருகின்றன. அடுத்த ஆண்டு பல புதிய சீன கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க உள்ளன.

சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் இந்தியாவில் தனது கீழ் செயல்படும் எம்ஜி பிராண்டுடன் வர்த்தகத்தை துவங்கியது. எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டில் முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்து. இந்தியாவின் முதல் இன்டர்நெட் வசதி கொண்ட கார் என்ற பெருமையுடன் வந்ததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமான சீனாவை சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் நுழைய இருக்கிறது. சீனாவில் கார் விற்பனை கடந்த 17 மாதங்களாக மந்த நிலையில் இருந்து வருவதால், இந்தியாவை சீன கார் நிறுவனங்கள் குறித்து வைத்துள்ளன.

செயிக், கிரேட் வால் மோட்டார்ஸ் வரிசையில் தற்போது சீனாவை சேர்ந்த சங்கன் கார் நிறுவனமும் இந்தியாவில் கால் பதிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குஜராத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை செயிக் குழுமம் கையகப்படுத்தி, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை உற்பத்தி செய்து வருகிறது. அதேபோன்று, மஹாராஷ்டிராவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் தனது கார்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் கிரேட்வால் மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. இதே பாணியில், சங்கன் குழுமம் இந்தியாவில் கார் உற்பத்தியை பிற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா, ஈரான், பிரேசில் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சங்கன் நிறுவனத்தின் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சீனாவில் ஃபோர்டு, மஸ்தா, சுஸுகி மற்றும் பிஎஸ்ஏ குழுமத்துடன் கூட்டணி அமைத்து கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ரூ.4,000 கோடி முதலீடு செய்வதற்கு சங்கன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எஸ்யூவி மற்றும் மின்சார கார் மாடல்களுக்கு இந்த முதலீடு படிப்படியாக பயன்படுத்தப்படும். இரண்டு பிராண்டுகளில் எஸ்யூவி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் திட்டமும் சங்கன் வசம் உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ், நிஸான் மற்றும் ஃபியட் க்றைஸ்லர் குழுமங்களின் கார் மாடல்களின் வினியோக மற்றும் சர்வீஸ் மையங்களை நடத்தி வரும் குரூப் லேண்ட்மார்க் மூலமாக கார் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. குர்கானில் தனது அலுவலகத்தை திறக்கும் திட்டமும் சங்கன் வசம் உள்ளது.

வரும் 2022ம் ஆண்டு முதல் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக CS75 என்ற பிரிமீயம் எஸ்யூவியும் க்ரெட்டாவுக்கு நிகரான மிட்சைஸ் எஸ்யூவியையும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








