டாடா மோட்டார்ஸ் கூட்டணியுடன் இந்தியாவில் களமிறங்க செர்ரி நிறுவனம் திட்டம்!
இந்திய சந்தையில் கார் வர்த்தகத்தை துவங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை துவங்கி இருக்கிறது செர்ரி கார் நிறுவனம்.

சீன அரசுக்கு சொந்தமான செர்ரி நிறுவனம் கார்கள், மினிவேன்கள் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. கடந்த 1997ம் ஆண்டு சீன அரசால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கார் உற்பத்தியில் அந்நாட்டின் 10வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. அதேநேரத்தில், சீனாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனம் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் சீன சந்தையில் செர்ரி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு செர்ரி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சீனாவின் சாங்சூ பகுதியில் கார் அசெம்பிளி ஆலையையும் ஜாகுவார் லேண்ட்ரோவர் திறந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் துணையுடன் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு செர்ரி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக லைவ்மிண்ட் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி நிறுவனமாக செயல்பட செர்ரி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விற்பனை மற்றும் தொழில்நுட்ப பகிர்மானம் உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான திட்டமும் உள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்தியாவில் எப்போது கால் பதிப்பது என்பது குறித்து செர்ரி நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்நிறுவனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி தெரிவித்ததாக லைவ் மிண்ட் தளம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டபோது செர்ரி நிறுவனத்தின் கார் ஆலைகளை பார்வையிட்டு வந்துள்ளனர். அதேபோன்று, செர்ரி நிறுவனத்தின் அதிகாரிகள் அடுத்த சில மாதங்களுக்குள் இந்தியாவில் உள்ள டாடா ஆலைகளை பார்வையிட வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கார்கள் பற்றி இந்தியர்களின் மனநிலையை ஜப்பானிய கார் நிறுவனங்கள் துல்லியமாக கணித்து வைத்து அளவுக்கு சீன கார் நிறுவனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, உள்ளூர் கார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கார் வர்த்தகத்தை துவங்குவதே சிறந்ததாக அவர்கள் கருதுகின்றனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற யூக செய்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் கூறி இருக்கிறார். இதுகுறித்த வினவுவதற்கு செர்ரி நிறுவனத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வரும் இந்திய சந்தையில் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு சீன நிறுவனங்கள் ஏக ஆர்வம் காட்டி வருகின்றன. சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது எம்ஜி பிராண்டை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே பாணியில் இருசக்கர வாகன நிறுவனங்களும் இந்திய சந்தையில் நுழைவதற்கு அதீத ஆர்வத்துடன் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








