வரும் ஏப்.3ல் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ கார் குழுமம்!
சிட்ரோன் கார் நிறுவனம் இந்திய வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் மீண்டும் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்துள்ளது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 3ந் தேதி இந்தியாவில் கால் பதிக்க இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினமே, சிட்ரோன் பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சிட்ரோன் பிராண்டில் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கும் பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டுதான் இந்த புதிய எஸ்யூவி மாடல் உலக அளவில் வெளியிடப்பட்டது.

இந்த எஸ்யூவி பிஎஸ்ஏ குழுமத்தின் EMP2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இரண்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் 1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

சிகே பிர்லா குழுமத்தின் கூட்டணியில் தனது கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய இருக்கிறது பிஎஸ்ஏ குழுமம். புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும். தனது கார்களுக்கு 90 சதவீத அளவுக்கான உதிரிபாகங்களை உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து பெறுவதற்கு பிஎஸ்ஏ- சிகே பிர்லா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இதனால், சிட்ரோன் பிராண்டில் வரும் கார்களின் விலை போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும். இந்த கார்களின் தனித்துவமான டிசைனும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் பிராண்டில் வரும் முதல் எஸ்யூவி மாடலான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், 2021ம் ஆண்டில்தான் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வரும் ஏப்ரல் 3ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் சில முக்கிய அறிவிப்புகளை பிஎஸ்ஏ குழுமத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








