திரைப்பட பாணியில் ஸ்டண்ட் செய்த இளைஞர்கள்: போலீஸிடம் சிக்கியது எப்படி...? வீடியோ!
திரைப்பட பாணியில் ஸ்டண்ட் செய்த இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் சிக்கியதன் பின்னணி குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

திரைப்படங்களில் வருவதைப்போன்று வாகனத்தில் ஸ்டண்ட் செய்யும் செயலை, இளைஞர்கள் சிலர் அண்மைக் காலங்களாக பொது சாலையில் அரங்கேற்றி வருகின்றனர். அவ்வாறு, அவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது மட்டுமின்றி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கெத்து காட்டுகின்றனர்.

ஆனால், அதுவே அவர்களுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. சில சமயங்களில், இத்தகைய ஸ்டண்ட் காட்சிகளை சக வாகன ஓட்டிகள் காட்சிப்படுத்தி, சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர்.

அவ்வாறு, பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி இரு இளைஞர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிக்கலில் சிக்கியிருக்கும் அந்த இரு இளைஞர்களும், பொது சாலையில் சாகசத்தில் ஈடுபட்டதன் காரணமாக, போலீஸாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.

இதில் ஒரு இளைஞர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 1981ம் ஆண்டு வெளிவந்த தில்லுமுல்லு, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் போன்று ஸ்டண்ட் செய்துள்ளார். அக்காட்சியில், ரஜினியின் தங்கை கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு காரைப் பற்றியவாறு, அதன் பின்னால் செல்லுவார்.

இதேபோன்ற, சாகசத்தைத்தான் மாருதி சுஸுகி எஸ்டீம் காரில் ஓர் இளைஞர் செய்திருந்தார். மேலும், அவருடைய நண்பர் காரின் ஜன்னல்மீது அமர்ந்துக்கொண்டு வெளியே தொங்கியவாறு பயணித்துள்ளார். இந்த காட்சிகளை, அதே சாலையில் பயணித்த மற்றுமொரு பயணி, அவரது கேமிராவில் பதிவு செய்து, இணையதளத்தில் விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.

அதற்கேற்ப வகையில், அந்த காட்சி அதிகப்படியான நெட்டிசன்களால் பார்க்கப்பட்டு வைரலாகியது. அதேசமயம், அந்த வீடியோ போலீஸாரின் கண்களிலும் சிக்கியது. இதனால், சாகத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் உட்பட காரை ஓட்டிச் சென்ற இளைஞரும் சட்ட சிக்கலைச் சந்தித்துக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி-மீரட் அதிகவேக சாலையில் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சாலையை அண்மையில்தான் பிரதமர் மோடி திறந்துவைத்திருந்தார். இச்சம்பவம்குறித்த வீடியோவை ஓடிவி என்ற செய்தி சேனல் வெளியிட்டுள்ளது.

பொதுவாக, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளும் இத்தகைய ஸ்டண்டுகளை சட்டவிரோதமானதாக பார்க்கின்றன. ஆகையால், பொது சாலையில் இவ்வாறு ஸ்டண்ட் செய்து, தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாருதி சுஸுகி எஸ்டீம் காரில் சாகசம் செய்தவர்களை போலீஸார் கண்டறிந்து, அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம், பிரிவு 84ன் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பாத தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வாகன ஓட்டிக்கு என் தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற முழுமையான தகவல் வெளியாகவில்லை.

பொது சாலைகளில் இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுவது மற்றவர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம், ஆனால், அவை மிக ஆபத்தானது. இது, அவர்களுக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தானது அமைகின்றது.

அதேசமயம், ஸ்கேட்டிங்கிற்கு மென்மையான மற்றும் சமதளமான சாலை அல்லது மேற்பரப்பு தேவைப்படுகிறது. இவ்வாறு, இல்லாத சாலையில் ஸ்கேட்டிங் செய்யும்போது, அதாவது அவர் செல்லும் பாதையில் சிறு தடையிருந்தாலும்கூட அது அவருக்கு மிகப் பெரியளவிலான ஆபத்தை ஏற்படுத்திவிடும்.


Click it and Unblock the Notifications








