போக்குவரத்து விதியை மீறிய போலீசார்... அடுத்து நடந்தது என்ன?
சீட்பெல்ட் போடாமல் காரில் வந்த போலீசாரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்வியுடன் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

கடந்த 1ந் தேதி முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராதத் தொகை அமலுக்கு வந்துள்ளது. பழைய அபாரதங்களை விட பன்மடங்கு அதிக அபாரதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், இதுவே பேச்சாக கிடக்கிறது.

அத்துடன், சில வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, அந்த வாகனத்தின் விலையை விட இருமடங்கு கூடுதலாக இருப்பதால், பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் இந்த புதிய அபாரதத் தொகை சட்டம் கிளப்பி இருக்கிறது.

மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை போலீசார் கையும் களவுமாக பிடித்து அபாரதத்தை போட்டு வருகின்றனர். இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் போலீசார் இதுபோன்ற விதிகளை கடை பிடிக்கிறார்களா என்று எதிர் கேள்வி எழுப்பும்போது சில சம்பவங்கள் இல்லை என்றே காட்டுகிறது.

அந்த வகையில், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த போலீசாரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் சிலர் அவர்கள் வந்த டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியை தடுத்து நிறுத்தி, ஏன் சீட் பெல்ட போடவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.

அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் அவர்களை களைந்து போக சொல்கிறார். ஆனாலும், அவர்கள் அந்த காரை தடுத்து நிறுத்தி ஆவேசாகமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இளைஞர்களின் கிடுக்கிப்பிடியை அடுத்து காரில் அமர்ந்து இருக்கும் போலீஸ்காரர் அவரசமாக சீட் பெல்ட் அணிய முயல்கிறார். அவர் இப்போதுதான் முதல்முறையாக சீட் பெல்ட் போட்டு பழகுகிறார் போல தெரிகிறது.

இதுவே சாமானியன் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் வந்திருந்தால், ரூ.1,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களுக்கு புதிய சட்டத்தில் இருமடங்கு அபராதம் விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

ஆம், சீட் பெல்ட் அணியாமல் போலீசார் வந்தால் ரூ.2,000 வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், சீட் பெல்ட் அணியாமல் வந்த போலீஸ்காரர்களுக்கு அபராதம் ஏதும் போடப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
ஏற்கனவே சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு இதுவே ரூ.2,000 ஆக வசூலிக்கப்படும். இது குறைவான தொகையாகவே கருத முடியும்.

ஏனெனில், இதர பிற குற்றங்களுக்கு பன்மடங்கு அதிகம். குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் ரூ.10,000 வரையிலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் ரூ.1,000 மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

அதிகபட்சமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்க முடியும். அத்துடன், வாகனத்தின் பதிவு உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவரது பெற்றோர் அல்லது காப்பாளரை கைது செய்வதற்கான அதிகாரமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவை எல்லாம் சாமானிய மக்களுக்கான சட்டமாகவே இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களி்ல் கருத்து தெரிவிக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகிறது. அதனை நிஜமாக்கும் விதத்தில், போலீசாரின் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








