பாரத் பென்ஸ் பிஎஸ்-6 கனரக வாகனங்கள் அறிமுகம்!
பாரத் பென்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பஸ், டிரக்குகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. அவற்றின் அறிமுகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் இந்தியாவில் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) என்ற பெயரில் இந்தியாவில் வர்த்தக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பாரத் பென்ஸ் பிராண்டில் தனது பஸ் மற்றும் கனரக டிரக்குகளையும் விற்பனை செய்து வருகிறது. பாரத் பென்ஸ் டிரக்குகள் சென்னையில் உள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாகிறது. அதன்படி, தனது டிரக்குகளுக்கு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான எஞ்சின்களை டெய்ம்லர் இந்தியா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

இந்த எஞ்சின்களுக்கு பிஎஸ்-6 சான்றையும் பெற்றிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதோடு, அந்த எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய டிரக்குகள் மற்றும் பஸ் மாடல்களையும் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய பஸ், டிரக் மாடல்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் டெய்ம்லர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான தமது பஸ், டிரக் மாடல்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் சந்தையில் மதிப்பு வாய்ந்த மாடல்களாக தொடர்ந்து இருக்கும் என்று டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கனரக வாகனங்களில் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இதனை 90 சதவீதமாகவும் உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.

மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய வாகனங்களை இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவை புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான வாகனங்களை தயாரிப்பதற்கான முக்கிய கேந்திரமாக பயன்படுத்த உள்ளது டெய்ம்லர் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








