இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை நிலவரம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான யுகம் துவங்கி இருக்கும் நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாத காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்கான பெரும் முயற்சியாக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு வருவதற்கான முயற்சிகளும், திட்டங்களும் தீவிரமாகி இருக்கின்றன. கார், பைக் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி இருக்கின்றன.

இந்த நிலையில், ஒரு சில எலெக்ட்ரிக் கார் மாடல்களுடன் துவங்கி இருக்கும் இந்திய மின்சார கார் சந்தை வர்த்தகம் எவ்வாறு செல்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மின்சார கார் விற்பனை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காலத்தில் மொத்தமாக 1,071 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

மஹிந்திரா வெரிட்டோ எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முதன்மையாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் 434 மஹிந்திரா வெரிட்டோ எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாதத்திற்கு சராசரியாக 62 வெரிட்டோ எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகிறது.

அடுத்து, டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதே காலத்தில் 389 டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக மாதத்திற்கு 56 டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகின்றன.

மூன்றாவதாக, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாத காலத்தில் 227 ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாதத்திற்கு 45 கார்கள் என்ற சராசரியை பெற்றிருக்கிறது.

கடைசியாக இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான மஹிந்திரா இ2ஓ பெற்றிருக்கிறது. மொத்தமாக 21 இ2ஓ எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மாதத்திற்கு 3 கார்கள் வீதம் இந்த விற்பனை சராசரி அமைந்துள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார்களின் வருகையால், இ2ஓ காரின் மார்க்கெட் வரும் மாதங்களில் முற்றிலுமாக முடங்கும் நிலை தெரிகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவில் மொத்தமாக 16,05,549 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களின் சந்தைப் பங்களிப்பு என்பது 0.067 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வரும் காலத்தில் இந்த சந்தைப் பங்களிப்பு என்பது வெகுவாக உயர்ந்து பெட்ரோல், டீசல் கார்களை விஞ்சும். அடுத்த தசாப்தத்தில் இந்த விகிதாச்சார வித்தியாசத்தை நாம் பார்க்க முடியும்.
Source: Autopunditz


Click it and Unblock the Notifications








