காரை வாங்கிய உடனே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி... எதற்காக தெரியுமா...?
புதிய காரை வாங்கிய உடனே செகண்ட் ஹேண்ட் காராக விற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வங்கித்துறை ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றது. முன்னதாக, பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட பலர் வங்கிகளில் இருந்து கடனை பெற்றுவிட்டு, அதனை திரும்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் நாடையே உலுக்கியநிலையில், தற்போது சத்தமே இல்லாமல் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலியாக ஐபிஎஸ் அதிகாரி வேடமணிந்த ஓர் நபர், புதிய யுக்தியை கையாண்டு வங்கிகளை ஏமாற்றி வந்துள்ளார்.
பொதுவாக, வங்கிகளில் புதிதாக வாகனங்களை வாங்கவே அனைவரும் கடன் பெறுவார்கள். ஆனால், இந்த போலி ஐபிஎஸ் அதிகாரி, வாகனங்களை செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனைச் செய்யவதற்காக வங்கிகளிலிடம் இருந்து கடன்களைப் பெற்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி மிகுந்த சம்பவம் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போலி ஐபிஎஸ் அதிகாரி வங்கியில் இருந்து கடன் பெற்று உயர் ரக கார்களை வங்கியுள்ளார். அதனை மீண்டும் செகண்ட் ஹேண்டில் விற்பனைச் செய்து கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்து, சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்தை மிகவும் துணிச்சலாக அரங்கேற்றிய அந்த நபர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் விபின் கார்த்திக் (வயது 29) என்று கூறப்படுகின்றது. இவருடைய தாயார் ஷியாமளா வேணுகோபால் (வயது 58). இவ்விருவரும் தற்போது குருவாயூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இருப்பினும் மோசடி செய்வதன் காரணமாக விலாசத்தை மாற்றி வருகின்றனர்.

மற்ற வழக்கமான மோசடிகார்களைக் காட்டிலும் சற்று வித்தியமாசமாக, வங்கிகளை ஏமாற்றுவதற்காக இவ்விருவரும் புதிய யுக்தியாக காவலர் வேடத்தை பயன்படுத்தியுள்ளனர். அதிலும், காவல்துறையின் உயர் பதவியான ஐபிஎஸ் வேடத்தை விபின் கார்த்திக் பயன்படுத்தியுள்ளார்.

விபின் கார்த்திக் மற்றும் அவரது தாயார் ஷியாமளா வேணுகோபால் ஆகிய இருவரும் கூட்டாக, காஷ்மீரை மையமாகக் கொண்டு இருக்கும் இந்திய போலீஸ் அதிகாரி ஒருவரின் தகவல்களை வைத்து போலி ஆவணம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.
மேலும், அதனைப் பயன்படுத்தி புதிய வாகனங்களுக்கான கடன்களை வங்கிகளிலிருந்து பெற்றதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு, கடன் மூலம் பெற்ற அனைத்து வாகனங்களையும் இரண்டாம் நபரிடம் விற்று பணத்தை பெற்றிருக்கின்றனர். இவ்வாறு, கோடிக் கணக்கான ரூபாயை வங்கிகளிடம் பெற்று அவர்கள் இருவரும் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில், இதுவரை 28-க்கும் மேற்பட்ட புதிய வாகனங்களை வாங்கி செகண்ட் ஹேண்டாக விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. அவை தற்போது எந்தெந்த பகுதிகளில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதுபோன்று, குருவாயூரில் மட்டுமே 12க்கும் மேற்பட்ட வங்கிகளில் அவர்கள் கடன் மோசடி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கேரளாவின் பிற பகுதிகளான நாடபுரம், தலசேரி, கோட்டயம், திருவனந்தபுரம், கலாமாசேரி, எர்ணாகுளம், கொய்லாண்டி மற்றும் வடகர உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 16 வங்கிகளிலும் அவர்கள் மோசடி செய்துள்ளனர்.

விபின் பல கார்களை கடனில் பெற்றிருந்தாலும், தற்போது ஒரே ஒரு காரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றார். தற்போது அவர் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா காரையே தன் வசம் வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, ஒரு ராயல் என்பீல்டு புல்லட் பைக்கையும் அவர் வைத்துள்ளார். இவையனைத்தையும் தற்போது போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதற்காக, கோழிகோடு, பிலதுகுளம் பகுதியில் உள்ள விபின் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது ஷியாமளாவை மட்டும் போலீஸார் கைது செய்தனர். விபின் அங்கிருந்து எப்படியோ தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆகையால், அவரை போலீஸார் தனிப் படை அமைத்து தேடி வருவதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை மனோரமா செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

வங்கிகளை மோசடி செய்வதற்காக போலியாக தயார் செய்யப்பட்ட ஆதார் அட்டை, விபின் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதைப் போன்ற போலி சான்று மற்றும் பொய்யான சம்பள தகவல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மற்ற வங்கிகளில் அதிகளவில் சேமிப்பு இருப்பதைப் போன்று போலி ஆவணங்களை தயாரித்தும் வங்கி மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் எப்படி போலீஸாரிடம் சிக்கினர் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். அதிலும் சிலர், விபின் ஏதோ ஓர் வங்கியை மீண்டும் மோசடி செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கலாம் என எண்ணால். ஆனால், அதுதான் கிடையாது.

விபின் போலியாக காவல் சீருடையில் பயணிக்கும்போதே போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கியுள்ளார். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்தன் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போதுதான், இவர் பல நாட்களாக வங்கிகளை ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தற்போது விபின் மற்றும் ஷியாமளா ஆகிய இருவர் மீதும் பல பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்துள்ளனர். மேலும், தப்பிச் சென்ற விபினை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








