இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்!
இந்தியாவில் ஃபெராரி நிறுபவனத்தின் புதிய எஃப்-8 டிரிபியூட்டோ சூப்பர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் ஃபெராரி நிறுவனத்தின் எஃப்-8 டிரிபியூட்டோ என்ற புதிய சூப்பர் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபெராரி நிறுவனத்தின் பிரபலமான 488 ஜிடிபி காருக்கு மாற்றாக இந்த புதிய கார் வர இருக்கிறது.

புதிய ஃபெராரி எஃப்-8 டிரிபியூட்டோ சூப்பர் காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 720 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபெராரி எஃப் டிரிபியூட்டோ சூப்பர் கார் 0 - 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, 200 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை பொருந்தியது. இந்த கார் மணிக்கு 340 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

புதிய ஃபெராரி எஃப்-8 டிரிபியூட்டோ சூப்பர் கார் முந்தைய 488 ஜிடிபி மாடலைவிட 40 கிலோ எடை குறைவானது. மேலும், 15 சதவீதம் கூடுதல் டவுன்ஃபோர்ஸ் விசையை வழங்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய 488 ஜிடிபி மாடலின் பல்வேறு டிசைன் அம்சங்கள் இந்த புதிய எஃப்-8 டிரிபியூட்டோ காரில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பழைய மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் பல்வேறு புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உட்புறமும் மிகச் சிறப்பாக இருப்பதுடன், பிரிமீயம் பாகங்களுடன் காட்சி தருகிறது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சற்று பெரிய அளவிலான பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

புதிய ஃபெராரி எஃப்-8 டிரிபியூட்டோ கார் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.4.05 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








