விரைவில் அறிமுகமாகிறது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்... சிறப்பு தகவல்!
ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார் மிக விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அமெரிக்க வாகன தயாரிப்பு உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவனம், அதன் ஈகோ ஸ்போர்ட் தண்டர் எடிசன் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை மோட்டார்மென்ஸ்ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த புதிய மாடல், டைட்டானியம் பிளஸின் ஸ்டைலையும், தொழில்நுட்பத்தையும் பெற்று உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, இன்டீரியர் மற்றும் வெளிப்புற தோற்றமும் அதன் ஸ்டைலை ஒத்ததாகவே அமைந்துள்ளது.

இந்த புதிய ஈகோ ஸ்போர்ட் தண்டர் எடிசன் கார், வெள்ளை மற்றும் நீலம் ஆகிய வண்ண ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கின்றது. மேலும், சிறப்பாக இந்த காரின் ஹூட்ஸ், பக்கவாட்டு பகுதி, மேற்கூரை மற்றும் டெயில்கேட் உள்ளிட்ட பகுதிகள் மேட் பினிஸிங்கிலான கருப்பு வண்ணத்தில் கிடைக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையிலான ஸ்பை படங்கள் அண்மையில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இத்துடன், முன்னதாக குரோம் பூச்சுடன் இருந்த பாகங்கள் தற்போது கருப்பு வண்ணத்தைப் பெற்று அசத்தலான காட்சி அமைப்பைப் பெற்றுள்ளது. இதேபோன்று, இந்த காரில் ஸ்போர்ட் டிசைனிலான 17 இன்ச் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இந்த புதிய மாடலின் உட்புறமானது அப்ஹோல்ட்ரி ஆப்ஷனில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த காரின் உட்புறம், டைட்டானியம் ட்ரிம்மில் உள்ள அதே வசதிகளைத்தான் பெற்றுள்ளன. ஆகையால், இதன் உட்புறம் டைட்டானியத்தின் லுக்கினை அச்சு அசலாக பிரதி எடுத்ததைப் போன்று காட்சியளிக்கிறது.

ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் தண்டர் காரில் பாதுகாப்பு வசதிகளாக இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகளும், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது, இந்த ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன் மாடல் கார்கள் டீலர்களை வந்தடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விற்பனை அறிவிப்பானது வரும் ஜீன் மாதத்தின் மத்தியில்தான் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ ஸ்போர்ட் கார்தான் எஸ்யூவி ரகத்திலான சப் 4 மீட்டர் முதல் காராக இருக்கின்றது. இதனாலயே இந்த கார் இந்தியர்கள் மத்தியில் பெரும் பிரபலமான மாடலாக இருந்து வருகின்றது. இந்த கார் மாருதி ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் புதிய வருகையாக இருக்கும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்க இருக்கின்றது.

இந்த கார், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 121 ஹெச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது. அதேபோன்று, டீசல் எஞ்ஜின் 99 ஹேச்பி பவரையும், 205என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கும். இதன் விலை மற்றும் மற்ற தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








