பினராயி விஜயன் அதிரடியால் கேரளாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் இதுதான்... பரிதாபமான நிலையில் தமிழகம்...
முதல்வர் பினராயி விஜயன் அதிரடியால் கேரள மாநிலத்திற்கு அதிர்ஷ்டம் ஒன்று அடிக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஹெஸ் ஏஜி (Hess AG). இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அமெரிக்கா மற்றும் கனடா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன.

இந்த சூழலில் கேரள மாநிலத்தில் எலெக்ட்ரிக் பஸ் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஹெஸ் ஏஜி நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. கேரள மாநில அரசின் சமீபத்திய செயல்பாடுகளே இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தங்கள் எலெக்ட்ரிக் வாகன கொள்கையை கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி வரும் 2022ம் ஆண்டிற்குள் கேரள மாநிலத்தில் 10 லட்சம் (1 மில்லியன்) எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், பஸ்களுக்கே கேரள அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. பொது போக்குவரத்து முறைகளில் பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாலையில் இயங்கும் மற்ற வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பஸ்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது.

எனவே அதிக அளவிலான எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்படும். எனவேதான் டீசல் பஸ்களில் இருந்து எலெக்ட்ரிக் பஸ்களுக்கு வேகமாக மாற வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது.

கேரள அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை மற்றும் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பது தொடர்பாக அம்மாநில அரசுக்கு இருக்கும் திட்டங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்ட பின்பே ஹெஸ் ஏஜி நிறுவனம் தனது ஆர்வத்தை தெரிவித்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், சுவிட்சர்லாந்தும் ஒன்று. அப்போது தலைமை செயலாளர் டாம் ஜோஸிடம் இதுகுறித்து ஹெஸ் ஏஜி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

தங்களால் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் பஸ்களை கேரள அரசு வாங்கி கொள்வதாக இருந்தால், அம்மாநிலத்தில் ஹெஸ் ஏஜி நிறுவனம் எலெக்ட்ரிக் பஸ் உற்பத்தி தொழிற்சாலையை கட்டமைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (Kerala State Road Transport Corporation - KSRTC) அதிகப்படியான எலெக்ட்ரிக் பஸ்களை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது இரண்டு தரப்பிற்கும் பயன் அளிக்கும் விஷயமாகவே இருக்கும்.

அத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் ஏராளமாக உருவாகும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். கேரள அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை மூலமாக அம்மாநிலத்திற்கு முதலீடு குவிவது பாராட்ட வேண்டிய ஒரு விஷயமே.

எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்கால உலகை ஆளப்போகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு, பராமரிப்பு செலவு மற்றும் எரிபொருள் செலவு குறைந்து, பொருளாதார ரீதியிலான நன்மைகளும் கிடைக்கும்.

இதனை கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நன்றாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக பணியாற்றி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன கொள்கை மூலமாக அது சம்பந்தமான முதலீடுகளையும் கூட அந்த மாநிலங்கள் ஈர்க்க தொடங்கி விட்டன.

ஆனால் கேரளா, ஆந்திர மாநிலங்கள் அளவிற்கு தமிழக அரசிடம் விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கை தொடர்பான திட்டங்கள் இருப்பது போல் தெரியவில்லை. எலெக்ட்ரிக் வாகன கொள்கை மூலம் மாநில அரசிடம் இருந்து கிடைக்கும் ஆதரவே அது தொடர்பான முதலீடுகளை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக தலைநகர் சென்னை ''ஆசியாவின் டெட்ராய்டு'' என வர்ணிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பெருமையை இழக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்திற்கு வருவதாக இருந்த கியா தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டது. தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் முதலீடு இந்திய அளவில் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் போக்குவரத்து கழகத்தை சீரமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் தேர்ந்து எடுக்கப்பட்ட நகரங்களில் அதிகப்படியான எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








