ஹோண்டா ஜாஸ், அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன்!
ஹோண்டா ஜாஸ், அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளன. ஹோண்டா ஜாஸ் கார் பெட்ரோல் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடல் ரூ.9.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.
ஹோண்டா ஜாஸ், அமேஸ், டபிள்யூஆர்வி கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எக்ஸ்க்ளூசிவ் எடிசன் என்ற பெயரில் இந்த மூன்று கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் இந்த கார்கள் வந்துள்ளன.

ஹோண்டா அமேஸ்
ஹோண்டா அமேஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலில் இரட்டை வண்ண அலாய் வீல்கள், புதிய சீட் கவர்கள், ஒளி உமிழ் பின்னணி கொண்ட டோர் சில் கார்டுகள், நகரும் வசதியுடன் கூடிய முன்புற ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா ஜாஸ்
ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ் எடிசன் கிடைக்கும். எல்இடி ஸ்டாப் லைட்டுடன் கூடிய கருப்பு வண்ண ஸ்பாய்லர், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய டோர் சில் கார்டுகள், கருப்பு வண்ண அலாய் வீல்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா டபிள்யூஆர்வி
ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலில் புதிய கருப்பு வண்ண பாடி டீக்கெல்கள், தனித்துவமான டோர் சில் கார்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை வளைக்கும் அம்சங்களாக இருக்கும்.

மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து மூன்று கார்களிலும் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் பேட்ஜ் காரின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், சாதாரண மாடலிலிருந்து எளிதாக இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வேறுபடுகிறது.

ஹோண்டா ஜாஸ், அமேஸ் மற்றும் டபிள்யூஆர்வி கார்கள் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் ஆர்சிட் ஒயிட் பியர்ல் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும்.

மூன்று கார்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஜாஸ் மற்றும் அமேஸ் கார்களின் பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது.

ஹோண்டா ஜாஸ் கார் பெட்ரோல் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடல் ரூ.9.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. ஹோணம்டா அமேஸ் கார் ரூ.7.87 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். டபிள்யூஆர்வி கார் ரூ.9.35 லட்சம் முதல் ரூ.10.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








