விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!
புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்யூவி கார்கள் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் புதிய புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வருவதிலேயே கவனத்தை செலுத்தி வருகின்றன.

ஹோண்டா நிறுவனம் பிஆர்வி மற்றும் சிஆர்வி ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களை கைவசம் வைத்துள்ளது. ஆனால், அவை விற்பனையில் போதிய பங்களிப்பை வழங்கவில்லை. அதிக விற்பனை வாய்ப்புள்ள செக்மென்ட்டுகளில் புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்குவதற்கு ஹோண்டா கார் நிறுவனமும் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

அந்த வகையில், வரும் பண்டிகை காலத்தை ஒட்டி, புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், டீலர்களிலும் இந்த புதிய எஸ்யூவியின் வருகை குறித்து குறிப்பிடத்தக்க அளவு விசாரணைகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஹோண்டா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 140 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்கள்தான் சிவிக் காரிலும் இடம்பெற்றிருப்பதால், இது சிறந்ததாக இருக்கும் என நம்பலாம்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி 4,295 மிமீ நீளமும், 1,770 மிமீ அகலமும், 1,605 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 2,610 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டு இருக்கும். 470 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை அளிக்கும். 180 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், கீ லெஸ் என்ட்ரி, பனோரமிக் சன்ரூஃப், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், பேடில் ஷிஃப்ட் வசதிகள் இருக்கும்.

பல்முனை பாதுகாப்பை வழங்கும் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

ரூ.14 லட்சம் முதல் ரூ.19 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








