இந்தியாவில் டீசல் கார் உற்பத்தி... ஹோண்டாவின் முடிவு இதுதான்!
இந்தியாவில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல்1 முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த கடுமையான மாசு உமிழ்வு விதிகளையடுத்து, டீசல் கார்களுக்கு முழுக்குப் போடுவதற்கு, மாருதி சுஸுகி, ரெனோ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஹூண்டாய் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொடர்வதற்கு முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது கார்களில் உள்ள 1.5 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஹோண்டா ஜாஸ், அமேஸ், சிட்டி, டபிள்யூஆர்வி, பிஆர்வி மற்றும் சிஆர்வி ஆகிய கார் மாடல்களில் இரண்டு விதமான டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்றன. இந்த மாடல்களில் குறைவான மாசு உமிழ்வுடன் அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும் டீசல் எஞ்சின்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

ஐரோப்பாவில் வரும் 2021ம் ஆண்டுடன் டீசல் கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் 75 சதவீதம் பெட்ரோல் கார்களும், 25 சதவீதம் டீசல் கார்களும் உள்ளன. டீசல் கார்களின் விற்பனை குறைவாக இருந்தாலும், அந்த வாடிக்கையாளர்களை இழக்க ஹோண்டா விரும்பவில்லை.

ஏனெனில், டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும்போது அதிக அளவிலான விற்பனை இழப்பை சந்திக்க நேரிடும் என்று ஹோண்டா கருதுகிறது. எனினும், அடுத்து வரும் ஆண்டுகளில் ஹைப்ரிட் எரிபொருள் வகை மாடல்களையும், தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் களமிறக்க முடிவு செய்துள்ளது. படிப்படியாக பெட்ரோல், டீசல் எஞ்சின் கார்களை விலக்கிக் கொள்ள நீண்ட கால திட்டமாக வைத்துள்ளது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








